தீர்ப்பு வந்த முதல் நாளிலேயே மோதல்: டெல்லி அரசின் உத்தரவை ஏற்க அதிகாரிகள் மறுப்பு; நீதிமன்ற அவமதிப்பு என ஆம் ஆத்மி சாடல்

டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த அடுத்தநாளில், இடமாற்றம் தொடர்பான உத்தரவை ஏற்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதனால் டெல்லியில் யாருக்கு அதிகாரம் என்ற மோதல் முடிவுக்கு வராத சூழல் ஏற்பட்டுள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பு என ஆம் ஆத்மி கண்டனம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதல்வராக அரவிந்த் கேஜ்ரிவால் பதவி வகிக்கிறார். இவர் தலைமையிலான அமைச்சரவை எடுக்கும் முடிவுகளை துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் நிறுத்தி வைத்தார். முக்கிய அதிகாரிகளின் நியமனங்களையும் ரத்து செய்தார். இதனால் ஆளுநருக்கும் முதல்வர் கேஜ்ரிவாலுக்கும் இடையில் அதிகாரச் சண்டை ஏற்பட்டது.

டெல்லி ஆட்சி நிர்வாகத்தில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்று விளக்கம் அளிக்கக் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2016-ம் ஆண்டு ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டப்படி டெல்லியில் துணை நிலை ஆளுநர்தான் நிர்வாகத்தின் தலைவர் என்று உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், ‘டெல்லி துணை நிலை ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க அதிகாரம் இல்லை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆலோசனைகளை கேட்டு செயல்பட வேண்டும்’ என்று தீர்ப்பளித்தது. இதனால் டெல்லியில் யாருக்கு அதிகாரம் என்ற நீ்ண்டகால கேள்விக்கு விடை கிடைத்துள்ளதாக கூறி ஆம் ஆத்மி தலைவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஆனால் தீர்ப்பு வந்த அடுத்த நாளிலேயே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பான உத்தரவு ஒன்றை, தலைமைச் செயலாளருக்கும், துறை செயலாளர்களுக்கும், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா அனுப்பி வைத்தார். நிலம், காவல்துறை, சட்டம் ஒழுங்கு தவிர மற்ற விஷயங்களில் மாநில அரசே முடிவெடுக்கலாம் என நேற்று உச்ச நீதிமன்றம் கூறியதால் அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மாநில அரசு எடுத்தது.

ஆனால் அது தவறான முடிவு என்றும், அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை - துணை நிலை ஆளுநரே அதிகாரம் கொண்டவர் எனக் கூறி அந்த உத்தரவை திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து அவர் விளக்கம் கேட்டபோது, டெல்லியில் அதிகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வந்துள்ளபோதிலும், அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் அதிகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அதன் முடிவு வரும் வரை துணை நிலை ஆளுநரே அதிகாரம் படைத்தவர் என பதிலளிக்கப்பட்டுள்ளது.

இதனால் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுபற்றி மணிஷ் சிசோடியா கூறுகையில் ‘‘துணை நிலை ஆளுநர் மற்றும் மாநில அமைச்சரவைக்கு உள்ள அதிகாரம் பற்றி உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெளிவுபடுத்தி விட்டது. ஆனால் இதை மதிக்காமல் அதிகாரிகளும், மத்திய அரசும் செயல்படுவது வேதனை அளிக்கிறது.

டெல்லியில் அரசு நிர்வாகம் சுமூகமாக நடக்க மத்திய அரசும், துணைநிலை ஆளுநரும் முன் வரவேண்டும். உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்புக்கு எதிராக செயல்படுவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்’’ எனக் கூறினார்.

டெல்லியில் மீண்டும் அதிகாரம் தொடர்பான மோதல் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Google+ Linkedin Youtube