ஷூ அணிந்து வேலைக்குச் செல்ல வேண்டுமென்ற என் கனவை காவல் ஆணையர் நிறைவேற்றி வைத்தார்: சிறுவன் சூர்யா நெகிழ்ச்சி

குடிசைப்பகுதியில் பிறந்து படிப்பை பாதியில் நிறுத்தி கிடைத்த வேலையைச் செய்துவந்த நான் மற்றவர்களைப் போல் ஷூ அணிந்து வேலைக்குச் செல்வேன் என்று கனவு கண்டிருந்தேன்.அதைக் காவல் ஆணையர் நிறைவேற்றி வைத்துள்ளார் என்று சிறுவன் சூர்யா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் பல நிகழ்வுகளைச் சந்தித்துள்ளது. குற்றவாளிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், காதலர்கள் பிரச்சினை, கணவன் மனைவி பிரச்சினை, கண்ணீர், அழுகை, சோகம், நியாயம், விரக்தி எனப் பல பரிமாணங்களைச் சந்தித்துள்ளது. அதே போல நெகிழ்ச்சியான பல நிகழ்வுகளையும் காவல் ஆணையர் அலுவலகம் சந்தித்துள்ளது.

சென்னை காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் பொறுப்பேற்ற பின்னர் நெகிழ்வான பல சம்பவங்கள் அடிக்கடி நடப்பதைக் காண முடிகிறது. காவல் பணியில் சமுதாய அக்கறையும், பொதுமக்களை நேசிப்பதையும் அடிக்கடி வலியுறுத்துபவர் காவல் ஆணையர்.பேச்சோடு நிற்காமல் அதைச் செயலிலும் காண்பிப்பவர் என்பது காவலர்களின் கருத்தாக உள்ளது.

பாதிக்கப்பட்டவர்களை உடனே நேரில் சென்று ஆறுதல் கூறுவது, இளைஞர்களைத் தாக்கிய போலீஸாரை இளைஞர்கள் வீட்டுக்கே இனிப்புகளுடன் சென்று மன்னிப்பு கேட்க வைத்தது, பணியின்போது குற்றவாளிகளை விரட்டிப் பிடிக்கும் காவலர்களை நேரில் அழைத்து பாராட்டிப் பரிசு வழங்குவது என பல நிகழ்வுகள் நடந்துள்ளன.

இது தவிர தீரமுடன் செயல்படும் பொதுமக்களை, இளைஞர்களை அழைத்துப் பாராட்டி பரிசு வழங்குவதும் நடக்கிறது. அப்படிப் பரிசுபெற்ற சிறுவன்  வைத்த கோரிக்கையை மறக்காமல் ஞாபகம் வைத்து அவருக்கு வேலை வாங்கிக் கொடுத்துள்ளார் காவல் ஆணையர்.

காக்கி உடை, காலில் கருப்பு கலரில் ஷூ அணிந்து மிடுக்காக சற்றே வெட்கம் கலந்த புன்னகையுடன் பணி நியமன ஆணையைப் பெற வந்திருந்த சிறுவன் சூர்யா தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

“என்னை முதன் முதலில் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி அழைத்துப் பக்கத்தில் அமர்த்திப் பாராட்டி ரிவார்டு வழங்கிய ஆணையர், 'உனக்கு எதாவது உதவி வேண்டுமா?' என்று கேட்டார். 'அய்யா எனக்கு எங்காவது நல்ல வேலை வாங்கித் தாருங்கள்' என்று நான் கேட்டேன். 'உனக்கு என்ன வயது?' என்று கேட்டார். 'நான் 17 வயது நடக்கிறது. 18 வயது ஆகப்போகிறது' என்றேன். சரி என்று சொல்லிவிட்டார்

ஆனால், அதன் பின்னர் அவர் மறந்திருப்பார் என்றுதான் நினைத்தேன். சரியாக ஞாபகம் வைத்து 18 வயதானவுடன் டிவிஎஸ் நிறுவனத்தில் ஏசி மெக்கானிக்காக எனக்கு வேலை வாங்கித் தந்தார். பணிக்குச் சேர்ந்து தினமும் யூனிபார்ம் அணிந்து ஷூ போட்டு பணிக்குச் செல்கிறேன். என் குடும்பம் வறுமையில் வாடும் குடும்பம், பணிக்குச் செல்ல ரப்பர் செருப்புகூட இல்லாத நிலை.

பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய நான் மற்றவர்கள் ஷூ அணிந்து நல்ல உடையுடன் வேலைக்குச் செல்வதை ஏக்கத்துடன் பார்ப்பேன். நாம் இப்படிப் போக முடியுமா? படிக்காத நாம் எங்கே அப்படிப் போக முடியும் என என்னை நானே தேற்றிக்கொள்வேன், ஆனால், காவல் ஆணையர் டிவிஎஸ் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்த்துவிட்டதன் மூலம் எனது கனவை நிறைவேற்றி வைத்துள்ளார்.

எனது குடும்பத்தின் பெரியவராக காவல் ஆணையரைப் பார்க்கிறேன். நான் செய்த செயலை உலகறியச் செய்து என்னைப் பாராட்டி வேலையும் வாங்கிக் கொடுத்த அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். எனக்கு இப்படிப்பட்ட உதவி செய்ததன் மூலம் இனி தவறுக்கு எதிராகப் போராடினால் நமக்கும் அங்கீகாரம் கிடைக்கும் என்ற எண்ணத்தை இளைஞர்கள் மத்தியில் விதைத்துள்ளார்'' என்று இளைஞர் சூர்யா நெகிழ்வுடன் குறிப்பிட்டார்.

Google+ Linkedin Youtube