துருவ் விக்ரமின் ஜோடியாக அறிமுகமாகும் மேகா

துருவ் விக்ரம் ஜோடியாக ‘வர்மா’ படத்தில் அறிமுகமாகிறார் மேகா.

ஜோதிகா நடிப்பில் வெளியான ‘நாச்சியார்’ படத்தைத் தொடர்ந்து பாலா இயக்கிவரும் படம் ‘வர்மா’. தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக் இது.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியான இந்தப் படம், 10 மடங்கு லாபம் சம்பாதித்துக் கொடுத்தது. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே இருவரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் வெற்றியால் இருவருக்குமே ‘நடிகையர் திலகம்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

‘வர்மா’ படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹீரோயினாக யார் நடிப்பது என்பதை இதுவரை சொல்லாமலேயே வைத்திருந்தனர். ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் சூர்யா - ஜோதிகா மகளாக நடித்த ஸ்ரேயா சர்மா நடிக்கிறார் என்றார்கள். ஆனால், அவர் இல்லை என்று படக்குழுவின் அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

மேகா என்ற மாடல் தான் துருவ் விக்ரம் ஜோடியாக நடிக்கிறார். ஏற்கெனவே ஒரு பெங்காலிப் படத்தில் நடித்திருக்கும் மேகா, ‘வர்மா’ மூலம் தமிழில் அறிமுகமாகிறார். கதக் நடனத்தில் தேர்ச்சிபெற்ற இவருடைய கேரக்டர் பெயரும் மேகா என்று தகவல் கிடைத்துள்ளது. முதல் படத்திலேயே சொந்தப் பெயரில் நடிப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் மேகா.

பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ இந்தப் படத்தை வழங்க, இ4 என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களின் இயக்குநர் ராஜு முருகன் வசனம் எழுதியுள்ளார். சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

“சினிமா மேஜிக்னு சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது” - கவுதம் கார்த்திக்

Google+LinkedinYoutube