‘விடுதலைப்புலிகள் திரும்பி வர வேண்டும்’ என சர்ச்சையாகப் பேசிய இலங்கை பெண் அமைச்சர் திடீர் ராஜினாமா

இலங்கையில் விடுதலைப்புலிகள் திரும்பி வர வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பெண் அமைச்சர் விஜயலேகா மகேஸ்வரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இலங்கை அரசில் ஆளும் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவர் விஜயலேகா மகேஸ்வரன்(வயது45). இவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அமைச்சரவையில், குழந்தைகள் நலவிவகாரத்துறை அமைச்சராக இருந்து வந்தார்.

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாநிலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த திங்கள்கிழமை யாழ்பாணத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் அமைச்சர் விஜயலேகா மகேஸ்வரன் பங்கேற்றார். அப்போது, அவர் பேசுகையில், “ கடந்த 2009-ம் ஆண்டு மே 18-ம் தேதிக்கு முன்பாக நாம் எப்படி வாழ்ந்தோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டியது இருக்கிறது.

இப்போது பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. இன்றைய சூழலில், வடக்கு மாநிலத்தில் மீண்டும் விடுதலைப்புலிகள் வர வேண்டும் என்பதேயே பெரும்பாலான மக்களின் விருப்பமாக இருக்கிறது. நாம் வாழ விரும்பினால், சுதந்திரமாக நடமாட வேண்டும். நம்முடைய குழந்தைகள் சுதந்திராக பள்ளிக்குச்சென்று, உயிருடன் மீண்டும் வீட்டுக்கு திரும்ப வேண்டும். ஆனால், வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது” என்று தெரிவித்திருந்தார்.

அமைச்சர் விஜயலேகா மகேஸ்வரன் பேசிய விவகாரம் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. விஜயலேகா பேசியது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தின.

மேலும், ஆளும் கட்சியில் உள்ள எம்.பி.க்களும் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்புக்கு ஆதரவாகப் பேசிய விஜயலேகாவை  டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். இதனால், நாடாளுமன்றத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

இந்நிலையில், சபாநாயகர் கரு ஜெயசூர்யா, அமைச்சர் விஜலேகா மகேஸ்வரனின் பேச்சு குறித்து அட்டர்னி ஜெனரல் விசாரிக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதாக இருந்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டார்.

மேலும், அமைச்சர் விஜயலேகாவின் பேச்சு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பிரதமர் விக்ரமசிங்கேவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், பல்வேறு தரப்பில்இருந்து வந்த நெருக்கடியைத் தொடர்ந்து தனது அமைச்சர் பதவியை விஜயலேகா மகேஸ்வரன் நேற்று ராஜினாமா செய்தார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், “நான் நேற்று மாலை பிரதமருடனான சந்திப்புக்குப்பின், 5 மணிக்கு என்னுடைய ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் அளித்துவிட்டேன். அட்டர்னி ஜெனரல் விசாரணைக்கு நான் உடன்பட வேண்டும் என்பதற்காக நான் ராஜினமா செய்திருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

Google+ Linkedin Youtube