வழக்குகள் ஒதுக்கீடு தலைமை நீதிபதியின் தார்மீக உரிமை: மீண்டும் உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் தலைமை நீதிபதியின் தார்மீக உரிமை என்று உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது, நான்கு மூத்த நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். முக்கிய வழக்குகளை குறிப்பிட்ட சில வழக்குகளை மூத்த நீதிபதிகளின் அமர்வுக்கு ஒதுக்காமல், தனக்கு வேண்டிய சில நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு ஒதுக்கீடு செய்வதாக புகார் தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் ஆகிய நான்கு பேரும், இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் முதன் முறையாக பேட்டியளித்தது, நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வழக்குகளை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக விதிமுறைகளை உருவாக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கன்வில்கர் மற்றும் டி.ஓய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்றம் சுமூகமாக நடைபெறவும், வழக்குகள் உரிய நேரத்தில் விசாரிக்கப்படவும் தலைமை நீதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமை எனக்கூறி பொதுநல மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இதேபோன்ற மற்றொரு வழக்கை மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷணும் தாக்கல் செய்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரிக்க கூடாது, மற்ற மூத்த நீதிபதிகள் அமர்வு விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த வழக்கை நீதிபதி ஏ.கே சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கி அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், உச்ச நீதிமன்ற வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் தார்மீக அதிகாரம் தலைமை நீதிபதிக்கே உண்டு, இதில் எந்த மாற்று முறையும் செய்ய இயலாது, மூத்த நீதிபதி என்ற அடிப்படையில் இது அவரின் அதிகாரம் என உத்தரவிட்டனர். ‘உச்ச நீதிமன்றத்தில் அனைத்து அதிகாரமும் பொருந்தியவர் தலைமை நீதிபதிதான். எந்த வழக்கை எந்த நீதிபதி விசாரிப்பது என்பதை தலைமை நீதிபதி மட்டுமே முடிவு செய்வார். இந்த முறை தொடரும்.

வழக்குகளுக்காக கொலிஜியம் தினமும் ஒதுக்கீடு செய்தால் பணிச்சுமை மேலும் அதிகரிக்கும். நீதித்துறையில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கத்தக்கதாக இருந்தாலும், அதை எந்த அளவில் மேற்கொள்வது என்பதை தலைமை நீதிபதி மட்டுமே முடிவு செய்ய முடியும்’ எனவும் நீதிபதிகள் கூறினர்.

Google+ Linkedin Youtube