என்சிஎல்டி நடவடிக்கைகளால் ரூ.3,000 கோடி திரும்பக் கிடைக்கும்: யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா சிஇஓ நம்பிக்கை

புதிய திவாலாக்க சட்டப்படி யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா தொடர்ந்துள்ள வழக்குகளில், தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம் (என்சிஎல்டி) எடுக்கும் நடவடிக்கைகள் மூலம் ரூ.3,000 கோடி அளவுக்கு தொகை தங்களுக்கு திரும்பக் கிடைக்கும் என நம்புவதாக யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பவன் பஜாஜ் தெரிவித்துள்ளார்.

மொத்தமாக 40 வழக்குகள் என்சிஎல்டியில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ரூ.580 கோடி ரூபாயை யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா ஏற்கெனவே கைப்பற்றி இருப்பதாகவும் பஜாஜ் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,

என்சிஎல்டியில் முறையிடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் இறுதி தீர்வுக்கு தயாராகி விட்டன. எனவே ரூ.3,000 கோடி அளவுக்கு தொகையை கைப்பற்றுவோம் என நம்புகிறேன். மார்ச் 31, 2018 நிலவரப்படி வங்கியின் மொத்த வாராக் கடன் 24 சதவீதமாக உள்ளது. எங்களது நடப்பு கணக்கு மற்றும் சேமிப்பு கணக்கு விகிதம் (சிஏஎஸ்ஏ) அதிகமாக உள்ளதால் வாராக் கடனை தாங்கும் வலு வங்கிக்கு உள்ளது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.220 கோடி நஷ்டம் அடைந்திருக்கிறோம். மார்ச் 2019 இறுதிக்குள் நிலைமை சீராகும் என நம்புகிறோம்.

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்கு பதிலாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், சில்லறை வர்த்தகம், விவசாயம் போன்றவற்றுக்கு கடன் வழங்குவதில் கவனம் செலுத்திவருகிறோம்.

மேற்கு வங்காளம் மற்றும் பிற கிழக்கு மாநிலங்களை முதன்மையாக கொண்டு யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா செயல்படுகிறது. இந்தப் பகுதிகளில் காணப்படும் தொழில் வளர்ச்சி இன்மையால் வாராக் கடன் அளவு அதிகமாக உள்ளது.

எங்களது முதலீட்டு தேவை திட்டத்தை அரசிடம் சமர்ப்பித்துள்ளோம். வாராக் கடனாக மாற வாய்ப்புள்ள கடன்களை கையாள்வதற்காக சொத்து மேலாண்மை கிளைகளை அமைப்பது தொடர்பான நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறோம் என்றார்.

Google+ Linkedin Youtube