கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’: ஜூலை 13-ம் தேதி ரிலீஸ்!

கார்த்தி நடித்துள்ள ‘கடைக்குட்டி சிங்கம்’, வருகிற 13-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், கார்த்தி ஜோடியாக சயிஷா நடித்துள்ளார். கார்த்தியின் மாமன் மகள்களாக பிரியா பவானிசங்கர், அர்த்தனா பினு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


சத்யராஜ் மனைவிகளாக பானுப்ரியா, விஜி சந்திரசேகர் இருவரும் நடித்துள்ளனர். பொன்வண்ணன், சூரி, ஸ்ரீமன், சவுந்தர ராஜா, மவுனிகா, யுவராணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

விவசாயி வேடத்தில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் கார்த்தி. அதுவும் மாதம் ஒன்றரை லட்சம் சம்பாதித்து, தன்னுடைய புல்லட்டில் ‘விவசாயி’ எனப் பெருமையுடன் ஸ்டிக்கர் ஒட்டி வைத்திருக்கும் விவசாயி வேடத்தில் அவர் நடித்திருக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைத்துள்ளார். சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை, சக்திவேல் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது.

ஃபேமிலி எண்டெர்டெயினராக உருவாகியுள்ள இந்தப் படம், தெலுங்கில் ‘சின்ன பாபு’ என்ற பெயரில் வெளியாகிறது. இந்தப் படத்தைப் பார்த்த மத்திய தணிக்கை வாரிய உறுப்பினர்கள், ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். வருகிற வெள்ளிக்கிழமை (ஜூலை 13) இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, ‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்கிறார் கார்த்தி. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.

Google+LinkedinYoutube