சான்றிதழ்களை பறிகொடுத்த ஏழை மாணவர்; எம்பிபிஎஸ் கலந்தாய்வுக்கு வந்தும் பங்கேற்காமல் திரும்பி சென்றார்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் நிரம்பிவிட்ட நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரியில் பணம் கட்டி படிக்க வசதியில்லாததால் சான்றிதழ்களை பறிகொடுத்த மாணவர் பூபதிராஜா, கலந்தாய்வுக்கு வந்தும் பங்கேற்காமல் திரும்பிச் சென்றார்.

விருதுநகர் மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த மாணவர் ஜி.பூபதிராஜா. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் (எஸ்சி) சேர்ந்த ஏழை மாணவரான இவரது தந்தை முன்னாள் ராணுவ வீரர். அதனால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் பிரிவில் விண்ணப்பித்துள்ளார். ஆனால், அந்த பட்டியலில் பெயர் இடம்பெறவில்லை. இருப்பினும் தனக்கு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடந்த 1-ம் தேதி கலந்தாய்வுக்கு வந்த இவரது சான்றிதழ்களை எழும்பூர் ரயில் நிலையத்தில் வைத்து மர்ம மனிதர்கள் சிலர் திருடிச் சென்றனர். இதையடுத்து கலந்தாய்வு நடக் கும் இடத்துக்கு சென்றபோது, கலந்தாய்வும் முடிந்துவிட்டது.

பின்னர் ஊருக்கு சென்று சான்றிதழ்களை வாங்கிக் கொண்டு, நேற்று நடந்த தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான (எஸ்சி) கலந்தாய்வில் கலந்துகொண்டார். அப்போது அரசு கல்லூரிகளில் எஸ்சி பிரிவினருக்கான அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டதால், கலந்தாய்வில் பங்கேற்காமல் பூபதிராஜா விரக்தியுடன் திரும்பிச் சென்றார்.

இது தொடர்பாக பூபதிராஜாவின் உறவினர் கருணாகரனிடம் கேட்டபோது, “அரசு மருத்துவக் கல்லூரிகளில் எஸ்சி பிரிவினருக்கான அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு சில இடங்கள் மட்டுமே இருந்தன. தனியாரில் படிக்க ஆண்டுக்கு ரூ.3 லட்சம் முதல் 5 லட்சம் வரை செலவாகும். அவ்வளவு பணம் கட்டி படிக்க வசதிவாய்ப்பு இல்லாததால் கலந்தாய்வில் பங்கேற்காமல் வந்துவிட்டோம்” என்றார்.

இதுபற்றி பூபதிராஜாவின் தாய்மாமா கணேசனிடம் கேட்டபோது, “முன்னாள் ராணுவத்தி னர் வாரிசுகள் பிரிவு கலந்தாய் வில் பங்கேற்றிருந்தால் பூபதி ராஜாவுக்கு கண்டிப்பாக இடம் கிடைத்திருக்கும். சான்றிதழ்கள் திருடு போனதால் கலந்தாய்வில் பங்கேற்க முடியவில்லை. டாக்டராக வேண்டும் என்ற பூபதி ராஜாவின் கனவு நிறைவேறவில்லை” என்றார்.

Google+LinkedinYoutube