குழந்தையை விற்ற ராஞ்சி காப்பகத்தில் 280 குழந்தைகள் பிறப்புக்கு ஆவணங்கள் இல்லை.

குழந்தையை விற்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் ராஞ்சி நிர்மல் இருதய காப்பகத்தில், 280 குழந்தைகளின் பிறப்புக்கு முறையான ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நிர்மல் இருதய விடுதி என்ற பெயரில் ஆதரவற்றோருக்கான காப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. அன்னை தெரசா ஏற்படுத்திய ‘மிஷனரிஸ் ஆப் சாரிட்டி’ அமைப்பின் கீழ் செயல்படும் இந்தக் காப்பகத்தின் மீது குழந்தைகள் நல அமைப்பிடம் ஒரு தம்பதியினர் புகார் அளித்தனர்.

அதில், தங்களிடம் ரூ.1.21 லட்சத்தைப் பெற்றுக்கொண்டு அந்தக் காப்பக நிர்வாகிகள் ஒரு குழந்தையை வழங்கியதாகவும், பின்னர், பல்வேறு காரணங்களைக் கூறி அந்தக் குழந்தையை வாங்கிக் கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து, ராஞ்சி மாவட்ட குழந்தைகள் நல அமைப்பு போலீஸாருக்கு தகவல் அளித்தது.

இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார், அந்தக் காப்பகத்தில் பணிபுரிந்த கன்னியாஸ்திரி கொன்சாலியா என்பவரையும், பெண் அலுவலர் அனீமா ஹிந்த்வார் என்பவரையும் கைது செய்தனர். இந்நிலையில், அந்தக் காப்பகத்தில் போலீஸார் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, கடந்த 2015 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், அங்கு 450 குழந்தைகள் பிறந்திருப்பது தெரியவந்தது. ஆனால், அவற்றில் 170 குழந்தைகள் பிறந்ததற்கு மட்டுமே அந்தக் காப்பகத்தில் முறையான ஆவணங்கள் இருந்தன.

மீதமுள்ள 280 குழந்தைகள் பிறந்ததற்கு முறையான ஆவணங்கள் அங்கு இல்லை. எனவே, அந்தக் குழந்தைகளும் வெளிநபர்களுக்கு விற்கப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணையைத் தொடங்கி நடத்தி வருகின்றனர். - ஐஏஎன்எஸ்

Google+ Linkedin Youtube