டி 20 தொடரை வெல்வது யார்?- இங்கிலாந்து அணியுடன் இந்தியா இன்று பலப்பரீட்சை

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரின் கடைசி ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும்.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான மூன்று டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இரு அணிகளும் கார்டிப் மைதானத்தில் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 38 பந்துகளில், 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 47 ரன்கள் சேர்த்தார். தோனி 24 பந்தில் 32 ரன்களும், சுரேஷ் ரெய்னா 27, ஹர்திக் பாண்டியா 12 ரன்களும் சேர்த்தனர். தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா 5, ஷிகர் தவண் 10 ரன்களிலும், அவர்களைத் தொடர்ந்து கே.எல்.ராகுல் 6 ரன்னிலும் வெளியேற பவர்பிளேவில் இந்திய அணி வெறும் 31 ரன்களே சேர்த்தது. ஜேக்பால் வீசிய கடைசி ஓவரில் தோனி, ஹர்திக் பாண்டியா ஜோடி 22 ரன்கள் விளாசியதால் தான் ஓரளவு கவுரமான இலக்கை கொடுக்க முடிந்தது.

இந்திய அணியை குறைந்த ரன்களுக்குள் கட்டுப்படுத்தியதில் டேவிட் வில்லி, லயிம் பிளங்கெட் முக்கிய பங்கு வதித்தனர். இருவரும் கூட்டாக 8 ஓவர்களை வீசி 35 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த நிலையில் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 149 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி 18 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. ஜேசன் ராய் 15, ஜாஸ் பட்லர் 14, ஜோ ரூட் 9, மோர்கன் 17, ஜானி பேர்ஸ்டோவ் 28 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் வில்லி களத்தில் நின்ற நிலையில் உமேஷ் யாதவ் வீசிய 19-வது ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 8 ரன்கள் சேர்க்கப்பட்டது. புவனேஷ்வர் குமார் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் முதல் பந்தை சிக்ஸருக்கும், அடுத்த பந்தை பவுண்டரிக்கும் விரட்டி மிரளச் செய்தார் அலெக்ஸ் ஹேல்ஸ்.

முடிவில் 19.4 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அலெக்ஸ் ஹேல்ஸ் 41 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரை 1-1 என சமநிலையை அடையச் செய்துள்ளது. முதல் ஆட்டத்தில் செய்த தவறுகளில் இருந்து சரியாக பாடம் கற்றுக்கொண்ட இங்கிலாந்து அணி பதிலடி கொடுத்த விதம் பாராட்டக்கூடியதாகவே இருந்தது.

அதிலும் குல்தீப் யாதவ் பந்து வீச்சை இங்கிலாந்து வீரர்கள் சாமர்த்தியமாக எதிர்கொண்டனர். இந்நிலையில் தொடரை வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி டி 20 ஆட்டம் பிரிஸ்டல் நகரில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. போட்டியை சோனி சிக்ஸ் சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Google+ Linkedin Youtube