அனாதைகளாக மாறும் முதியோர்கள்: நான்கில் ஒருவர் தனிமையில் வாழ்வதாக அதிர்ச்சித் தகவல்

தேசத்தின் மக்கள் தொகை 100 கோடிக்கு மேல் கடந்துவிட்டநிலையில், முதியோர் நிலை குறித்து எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், நான்கில் ஒருவர் தனிமையில் வாழ்கிறார்கள், ஆதரவின்றி தவிக்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

எல்லோரும் ஒருநாள் முதியோராகத்தான் ஆகப்போகிறோம் எனத் தெரியாமல் பெற்ற பிள்ளைகளை தங்களின் பெற்றோர்களை கைவிடுகின்றனர், பிள்ளைகள் இல்லாத நிலையில், உறவினர்களை நாடி இருக்கும் நிலையில், அவர்களாலும் முதியோர் கைவிடப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

   

டெல்லியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் ஏஜ்வெல் பவுண்டேஷன் 10 ஆயிரம் முதியோர்களிடம் பல்வேறு கேள்விகள்கேட்டு மே மாதம் முதல் ஜுன்மாதம்வரை கருத்துக் கணிப்பு நடத்தியது. இதில் 23.44 சதவீதம் முதியோர்கள் தாங்கள் தனிமையில் வாழ்வதாகத் தெரிவித்துள்ளனர்.

49 சதவீத முதியோர்கள் தங்களின் மனைவியுடன் சேர்ந்து வாழ்வதாகவும், 26 சதவீதம் பேர் தங்களின் பிள்ளைகளுடன், குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து வாழ்வதாகத் தெரிவித்தினர்.

ஆனால், நகர்புறங்களில் வசிக்கும் முதியோர்களில் 25 சதவீதம் தனிமையில் வாழ்வதாகவும், கிராமப்புறங்களில் வசிப்போர் 21 சதவீதம் தனிமையில் வாழ்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வில் முடிவில் பெரும்பாலான முதியோர்கள் கடைசிக் காலத்தில் தங்களின் மனைவியுடன் வாழ விரும்புவதாகவும், பலர் தனிமையில் வாழவேவிருப்பம் தெரிவித்துள்ளனர். வாழ்வின் விளிம்புப்பகுதியில் வாழும் முதியோர்கள் கடைசிக் காலத்தில் சுதந்திரமான வாழ்வையும், யாரையும் பணத்துக்காக சார்ந்திருக்காமல் வாழும் வாழ்க்கையைத் தேடுகின்றனர்.

இந்த ஆய்வில் 37 சதவீதம் முதியோர் மட்டுமே கடைசிக் காலத்தில் பணத்துக்காக யாரையும் எதிர்பாராமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மற்ற 68 சதவீதம் முதியோர்கள் சிந்தனை ரீதியாகச் சுதந்திரமாக வாழ்வதாகத் தெரிவித்துள்ளனர்.

60 சதவீதம் முதியோர்கள் உளவியல் ரீதியாக சுதந்திரமாக வாழ்வதாகவும், 70 சதவீதம் பேர் சமூக ரீதியாக சுதந்திரமாக வாழ்வதாகவும் தெரிவித்துள்ளனர். 89 சதவீதம் முதியோர் கடைசிக் காலத்தில் நல்லதரமான மருத்துவ சேவையை உறுதி செய்ய வேண்டும் என்றும், சுதந்திரமான வாழ்வை உறுதி செய்யவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஏஜ்வெல் பவுண்டேஷன் அமைப்பின் நிறுவனர் ஹிமான்ஸு ராத் கூறுகையில், “ ஒவ்வொரு முதியோரையும் கடைசிக் காலத்தில் நிதித்தேவைகளுக்காக யாரையும் சார்ந்திருக்காமல் இருக்க வழி செய்வது தற்போது மிகவும் அவசரசத் தேவையாகும். அவ்வாறு பணம் இருந்துவிட்டால், அவர்கள் தங்களின் உடல்நிலையைப் பராமரித்து நீண்டநாட்கள் வாழ்வார்கள்.

அதுமட்டுமல்லாமல், அவர்களுக்குச் சுதந்திரமும், கனிவான மருத்துவச் சேவையும் கண்டிப்பாக அவசியம்.அது குடும்பமாக, சமூகமாகவோ, அல்லது அரசாகவோ இருந்தாலும், அதை அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Google+ Linkedin Youtube