8 சிறுவர்கள் மீட்பு: தாய்லாந்து குகையில் மீட்புப்பணி தீவிரம்

தாய்லாந்தில் உள்ள குகையில் கடந்த 15 நாட்களாக சிக்கித் தவிக்கும் 13 சிறுவர்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது. முதல்நாளில் நேற்று 4 பேர் மீட்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 4 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. இந்தக குகை 10 கி.மீ. நீளம் உடையதாகும். கடந்த வாரம் 11 வயது முதல் 16 வயதுவரை உடைய 12 சிறுவர்கள் கொண்ட கால்பந்து அணியைச் சேர்ந்தவர்கள் இந்தக் குகைக்கு சாகசப் பயணம் சென்றனர். இந்தச் சிறுவர்களுடன் சேர்ந்து அணியின் துணைப் பயிற்சியாளர் ஒருவரும் சென்றார்.

   

ஆனால், இவர்கள் சென்ற சமயம் அங்கு திடீர் மழை பெய்து வெள்ளம் நீர் குகைக்குள் புகுந்தது. நீரும், சேறுமாகக் குகை சூழ்ந்ததால் குகையைவிட்டு வெளியேற முடியாத சூழல் அவர்களுக்கு ஏற்பட்டது. இதனால் இரண்டு வாரங்களாக உணவும், நீரும் இன்றி அவர்கள் குகைக்குள் சிக்கினர்.

தாய்லாந்து நாட்டின் கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அங்கு தற்போது பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் உதவிக்கரம் நீட்ட, மீட்புப் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தாய்லாந்து மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்துள்ள நீச்சல் வீரர்கள் நேற்று களத்தில் இறங்கி 4 சிறுவர்களைப் பத்திரமாக மீட்டுவந்தனர். இந்நிலையில், 2-வது நாளாக இன்றும் மீட்புப்பணி தொடர்ந்து நடந்தது.

இது குறித்து சியாங் ராய் மாநிலத்தின் இடைக்கால கவர்னர் நராங்சாக் ஓஸ்டானகோர்ன் கூறுகையில், இன்று காலை 11 மணியில்இருந்து 2-ம் கட்ட மீட்புப்பணி தொடர்ந்து நடந்தது. இன்று மாலைக்குள் நல்லசெய்தியை எதிர்பார்க்கலாம். மீட்புப்பணிக்கான சூழல், காலநிலை நேற்றில் இருந்தே சிறப்பாக இருந்து வருகிறது. சிறுவர்களின் உடல்நிலையும் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. மீண்டும் மழை தொடங்கிவிடும் எனக் கருதப்படுவதால், மீட்புப்பணியை விரைவுபடுத்தியுள்ளோம் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் 4 ஆம்புலன்ஸுகள் குகைக்கு விரைந்துள்ளநிலையில், இதுவரை 8 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் 5 பேர் மட்டுமே குகைக்குள் உள்ளனர். மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.குகையில் இருந்து இதுவரை எத்தனைச் சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளார்கள் என்பதைக் கூற அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

சிறுவர்களைப் பத்திரமாக மீட்கவேண்டும் என்ற நோக்கில், இரவுபகலாக மீட்புப்பணியில் வீரர்கள் ஈடுபட்டு, குகைக்குள் இருக்கும் தண்ணீரைவெளியேற்றி வருகின்றனர். இதற்கிடையே நேற்று இரவு மீண்டும் மழை பெய்தபோதிலும் கூடப் பெருமளவு தண்ணீர் குகைக்குள் வரவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று மீட்கப்பட்ட சிறுவர்கள் 4 பேரும் அனைவரும் மிகுந்த பசியோடு இருப்பதால், அவர்களுக்கு தாய்லாந்து உணவான மிளகாய் போட்டு வறுத்த இறைச்சி, அரிசிசாதம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு மருத்துவப்பரிசோதனையும் நடந்து வருகிறது. அவர்கள் உடல் நிலை மிகவும் பலவீனமாக இருப்பதால், அவர்களைப் பார்க்க வரும் குடும்பத்தினர், உறவினர்களால் நோய் தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால், தனி அறையில் சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Google+ Linkedin Youtube