'தொழில்திறனை படிக்கும்போதே தெரிந்து கொள்வது அவசியம்'

''பத்து மாணவர்கள் தொழில் முனைவோரானால், 1,000 பேருக்கு வேலை கொடுக்கலாம்,'' என, தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர், இறையன்பு தெரிவித்தார்.
அரசு கலைக்கல்லுாரி மாணவர்களுக்கான, ஒரு நாள் தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம், சென்னை, நந்தனம் அரசுக்கல்லுாரியில் நேற்று நடந்தது. முகாமை துவக்கி வைத்து, இறையன்பு பேசியதாவது: தொழில்முனைவு என்பது ஒரு பண்பின் உணர்வு. இந்த பண்பு, அரசு, தனியார் மற்றும் சேவை துறைகளில் இருக்க வேண்டும். தொழில்முனை பண்பு இல்லையென்றால், எந்த செயலையும் சிறப்பாக செய்ய முடியாது. எனவே, தமிழகத்தில் உள்ள, 88 அரசு கலைக்கல்லுாரிகளில், ஒரு நாள் தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடத்த உள்ளோம்.இதனால், மாணவர்கள் உடனடியாக தொழில் முனைவோராக மாற வேண்டும் என்றில்லை.தொழில் துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள் என்ன, அதற்கான வழிமுறைகள் என்ன என்பது போன்ற விஷயங்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.மாணவர்கள், வேலைவாய்ப்பை மட்டுமே குறி வைத்து, வாழ்க்கையை துவங்கக் கூடாது. தொழில் முனைவோராக மாற வாய்ப்பு உள்ளது என்பதை உணர்த்துவதே, எங்கள் நோக்கம்.தங்கள் சொந்த அனுபவங்களை, யோசனைகளாக மாற்றி, புதிய தொழில்முனைவோராக மாறலாம். இதுவரை, 1.90 லட்சம் பேருக்கு தொழில்முனைவோர் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. பத்து பேர் தொழில் முனைவோரானால், 1,000 பேருக்கு வேலை கொடுக்கலாம். இது போன்ற பயிற்சி மற்றும் முகாம்கள் வழியாக, மாணவர்கள் தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைச் செயலர், தர்மேந்திரபிரதாப் யாதவ், தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க பயிற்சி நிறுவனத்தின் கூடுதல் இயக்குனர், சஜீவனா உட்பட, 100க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.

Google+ Linkedin Youtube