உள்நாட்டுப் போர் ஏற்பட வேண்டும் என்று பாஜக விரும்புகிறதா?- மம்தா பானர்ஜி ஆவேசம்

தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் நாட்டில் உள்நாட்டுப் போர் ஏற்பட வேண்டும் என்று பாஜக விரும்புகிறதா என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அசாமில் 3.29 கோடி மக்கள் வசிக்கின்றனர். அசாம் மாநிலம் வங்கதேசத்தை ஒட்டி அமைந்துள்ளதால் அங்கு வங்கதேசத்தைச் சேர்ந்த அகதிகள் குடியேறி விடுகின்றனர். இவர்களைக் கண்டுபிடிப்பதற்காக, தேசிய குடிமக்கள் பதிவேட்டை அரசு தயாரித்துள்ளது. இதில் 40 லட்சம் பேர் விடுபட்டுள்ளனர். இந்த விவகாரத்தை மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தீவிரமாகக் கையில் எடுத்துள்ளார்.

 

இது தொடர்பாக பேசுவதற்காகவும், தேர்தல் குறித்து ஆலோசனைகள் நடத்துவதற்காகவும் டெல்லிக்கு 3 நாட்கள் பயணமாக மம்தா பானர்ஜி வந்துள்ளார். இன்று காலையில் நாடாளுமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் மூத்த தலைவர்களைச் சந்தித்து மம்தா பானர்ஜி பேசினார்.

அதன்பின் மாலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கியமுற்போக்குக் கூட்டணி கட்சியின் தலைவர் சோனியா காந்தியையும் முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினார்.

அப்போது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து தீவிரமாக ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்குப் பின், சோனியா காந்தி இல்லத்துக்கு வெளியே நிருபர்களுக்கு மம்தா பானர்ஜி பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் என்ஆர்சி விவகாரத்தைச் செயல்படுத்தினால் உள்நாட்டுப் போர் வெடிக்கும் என்று கூறியது குறித்து நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு அவர் பதிலளித்ததாவது:

''நான் ஒன்றும் பாஜகவுக்கு வேலைக்காரி இல்லை. அவர்கள் விடும் அனைத்து அறிக்கைகளுக்கும் பதில் அறிக்கை அளித்துக்கொண்டே இருக்க முடியாது. நான் உள்நாட்டுப் போர் வெடிக்கும் என்று கூறவில்லை.

2019-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற முடியாது, ஆட்சிக்கு வர முடியாது என்பதை பாஜகவினர் உணர்ந்துவிட்டார்கள். இதனால், பாஜக அரசியல் ரீதியாக மிகுந்த பதற்றத்தில் இருக்கிறது.

அசாமில் கொண்டுவரப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டில் 40 லட்சம் மக்கள் விடுபட்டுள்ளனர். இவர்கள் பிஹார், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். பாஜகவுக்கு இப்போது என்ன தேவை, என்ன எதிர்பார்க்கிறது. உள்நாட்டுப் போரை எதிர்பார்க்கிறார்களா?

ஒதுக்கிவைக்கப்பட்ட 40 லட்சம் மக்களும் உண்மையான வாக்காளர்கள், உண்மையான மக்கள். அவர்கள் எப்படி குடிமைப் பதிவேட்டில் இருந்து நீக்க முடியும். பொறுப்புணர்ச்சியுடன் ஏதேனும் பேசினால் மட்டுமே, நான் பாஜகவிடம் நேரடியாகப் பேசுவேன். அவர்கள் என்னை அவமதித்தால்கூட, நான் அவர்களிடம் மரியாதையுடன்தான் பேசுவேன்.

முதலில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதுதான் எங்கள் முன் இருக்கும் சவாலாகும். நாடாளுமன்றத்தில் அனைவரும் ஒன்றாக இணைந்து, போராடும் போது, வெளியில் ஏன் இதேபோன்று ஒன்றாக இணைந்து போராட முடியாது.

ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரிடம் நடப்பு அரசியல் குறித்துப் பேசினோம். எதிர்காலத்தில் அனைவரும் இணைந்துகூடத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு இருக்கிறது.''

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

Google+LinkedinYoutube