எஸ்சி, எஸ்டி சட்டத்திருத்தம் மழைக்காலக் எஸ்சி, எஸ்டி சட்டத்திருத்தம் மழைக்காலக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங் உறுதி

 எஸ்சி,எஸ்டி வன்கொடுமை தடுப்பு திருத்த மசோதா நடப்பு மழைக்காலக் கூட்டத்தொ டரிலேயே அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார்.

எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் குறித்து சமீபத்தில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், எஸ்சி,எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் அரசு அதிகாரிகளை உடனடியாக கைது செய்யத் தடை விதித்தது. அவர்களின் உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, முறையான விசாரணைக்குப் பின் கைது செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்தது.

இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் பாரத்பந்தை தலித் அமைப்புகள் நடத்தின. இதில் நடந்த வன்முறைச் சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு எஸ்டி,எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இதையடுத்து, எஸ்சி,எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

அது குறித்து மக்களவையில் இன்று கேள்வி நேரத்துக்குப் பின் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், “ எஸ்சி, எஸ்டி சட்டத்திருத்தம் குறித்து ஏன் உறுப்பினர்கள் இப்போது எழுப்புகிறார்கள் எனத் தெரியவில்லை. இந்தச் சட்டத்திருத்தம் குறித்து உறுப்பினர்கள் தெரிந்திருப்பார்கள். அது குறித்த தெளிவும் இருக்கும் என நம்புகிறேன்.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்பு மசோதாவில் திருத்தம் கொண்டுவர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

எஸ்சி,எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தை உச்ச நீதிமன்ற உத்தரவு நீர்த்துப்போகச் செய்துவிட்டதை நாடே அறியும். அதன்படி, எஸ்சி, எஸ்டி சட்டத்தில் ஒருவரைக் கைது செய்யும் முன் விசாரணை தேவை என்று உத்தரவிட்டிருந்தது.

ஆனால், மத்திய அரசு கொண்டுவரும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத் திருத்த மசோதாவில் எந்தவிதமான நீர்த்துப்போகும் அம்சமும் இருக்காது என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இந்த மழைக்காலக்கூட்டத்தொடரிலேயே இந்தத் திருத்த மசோதாவை அறிமுகம் செய்வோம்” என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

மத்திய அரசு கொண்டுவர உள்ள எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்திருத்தத்தின்படி, குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை எந்தவிதமான முன்விசாரணையும் இன்றி கைது செய்ய முடியும். எந்த அதிகாரிகளிடமும் முன் அனுமதி வாங்க வேண்டியதில்லை. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும் யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை. வழக்கில் தீர்ப்பு வரும்வரை குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்க அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google+ Linkedin Youtube