ஒசாமா பின் லேடன் மகன் திருமணம்: அமெரிக்க இரட்டைக் கோபுர தகர்ப்புத் தீவிரவாதி மகளை மணந்தார்

அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் முன்னாள் தலைவர் ஒசாமா பின் லேடனின் மகன் ஹம்சா பின் லேடன் திருமணம் செய்துள்ளார்.

கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நியூயார்க் இரட்டைக் கோபுரத் தகர்ப்புக்கு விமானத்தைக் கடத்திய தீவிரவாதி முகமது அட்டாவின் மகளை ஒசாமாவின் மகன் ஹம்சா மணந்துள்ளார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

இந்தத் தகவலை ஒசாமா பின் லேடனின் சகோதரர்கள் அகமது மற்றும் ஹசன் அல் அட்டாஸ் ஆகியோர் 'தி கார்டியன்' நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளனர்.

உலக நாடுகளை அச்சுறுத்திய அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன். கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நியூயார்க் சென்ற இரு விமானங்களை அல்கொய்தா தீவிரவாதிகள் கடத்திச் சென்று நியூயார்க்கில் உள்ள இரட்டை கோபுரத்தின் மீது மோதச் செய்து பெரும் தாக்குதலை நடத்தினார்கள். இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இதற்குப் பழிக்குப்பழி வாங்கும் வகையில், அமெரிக்கா கடந்த 2011-ம் ஆண்டு மே 2-ம் தேதி பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த ஒசாமா பின் லேடனை, ட்ரோன் விமானம் மூலம் தாக்கிக் கொன்றது. அதன்பின் அல்கொய்தா இயக்கத்தின் வளர்ச்சி குறைந்த போதிலும், தொடர்ந்து அமெரிக்காவுக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

ஆனால், ஒசாமாவின் குடும்பத்தை ஒட்டுமொத்தமாக அழிக்க நினைத்த அமெரிக்கா, அல்கொய்தா அமைப்பில் இருந்த ஒசாமாவின் மகன் காலித்தை அபோதாபாத் ரெய்டின் போது, அமெரிக்கப் படைகள் சுட்டுக்கொன்றன. ஒசாமாவின் மற்றொரு மகன் சதாத் 2009-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் நடந்த ஆளில்லா விமானத் தாக்குதலில் அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், மூன்றாவது மகன் ஹம்சா பின் லேடன் அல்கொய்தா அமைப்பின் முக்கியத் தலைவர் பொறுப்பில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். தனது தந்தையைக் கொன்ற அமெரிக்கப் படைகளை பழிவாங்கும் வகையில் அவர் தொடர்ந்து அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தில் பணியாற்றி வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒசாமா பின் லேடனுக்கு மொத்தம் 3 மனைவிகள். 3-வது மனைவி பாகிஸ்தானின் அபோதாபாத்தில் வசிக்கின்றார். மூன்றாவது மனைவி கைரியா சாபரின் மகன்தான் ஹம்சா பின் லேடன் ஆவார்.

இந்நிலையில், ஹம்சா பின் லேடனுக்குத் திருமணம் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2001-ம் ஆண்டு அமெரிக்க இரட்டைக் கோபுரத்தை இடிக்க விமானத்தைக் கடத்திய தீவிரவாதி முகமது அட்டாவின் மகளை அவர் மணந்துள்ளார்.

இது குறித்து ஒசாமா பின் லேடனின் சகோதரர்கள் அகமது மற்றும் ஹசன் அல் அட்டாஸ் கூறுகையில், ''எங்கள் சகோதரர் ஒசாமாவின் மகன் ஹம்சா பின் லேடன் முகமது அட்டாவின் மகளைத் திருமணம் செய்திருக்கிறார் என்று அறிந்தோம். ஆனால் இப்போது, ஹம்சா குடும்பத்துடன் எங்கு தங்கி இருக்கிறார் என்பது எங்களுக்கு உறுதியாகத் தெரியாது. ஆப்கானிஸ்தானில் இருக்கிறார் என்பது மட்டும் தெரியும்'' எனத் தெரிவித்தனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இஸ்ரேலுக்கு எதிராகத் தீவிரமாக போராடப்போவதாக ஹம்சா பின் லேடன், அய்மான் அல் ஜவாஹிரி உள்ளிட்ட அல்கொய்தா தீவிரவாத தலைவர்கள் சவால்விட்டதைத் தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக இவர்களை அழிக்கும் முயற்சியில் மேற்கத்திய நாடுகளின் படைகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இதற்கிடையே ஒசாமாவின் 3-வது மனைவியைத் தவிர்த்து மற்ற 2 மனைவிகள் குடும்பத்தினருக்கு சவுதி அரேபியாவின் முன்னாள் இளவரசர் மகமது பின் நயிப் அடைக்கலம் கொடுத்து தங்க வைத்துள்ளார். அதேசமயம், ஒசாமாவின் தாயார் அலியா கானிமுடன் ஒசாமாவின் மனைவிகள், குழந்தைகள் இன்னும் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.    

Google+ Linkedin Youtube