கலைஞரின் மறைவைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை: கண்ணீர் மல்க வீடியோவில் இரங்கல் தெரிவித்த விஜயகாந்த்

கலைஞர் மறைவுச் செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. என்னால் அவரது மறைவைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி, சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை மாலை காலமானார். அவருக்கு வயது 95.

 

இந்நிலையில் கலைஞர் மறைவு குறித்து விஜயகாந்த் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ''நான் அமெரிக்காவில் இருந்தாலும் என் எண்ணங்களும், நினைவுகளும் தமிழகத்தில்தான் இருக்கிறது. கலைஞர் இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. கருணாநிதியைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திமுக தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கலைஞருடன் நான் நன்றாகப் பழகினேன். நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது அவரைக் கவுரவிக்க விழா எடுத்தேன். கலைஞர் மறைவுச் செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. என்னால் அவரது மறைவைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை'' என்று விஜயகாந்த் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அவரது ட்விட்டர் பக்கத்தில் “இந்த யுகத்தின் ஈடு இணையில்லா ஒப்பற்ற தலைவர் கலைஞர் காலமானார் என்கிற செய்தி கேட்டு மிகவும் துயரம் அடைந்தேன்.

அவர் மண்ணுலுகை விட்டு மறைந்தாலும், தமிழுக்கு ஆற்றிய தொண்டு,பழகும் தன்மை, நட்புணர்வு, ஐந்து முறை முதல்வராக இருந்த வரலாறு, அவரது நினைவுகள் காலத்தால் அழியாதது. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று விஜயகாந்த் தெரிவித்தார்.

Google+ Linkedin Youtube