இந்தியாவில் ஸ்டீவ் ஸ்மித் 3 சதங்கள், கோலி 46 ரன்கள்: ஆஸி.தொடரில் இதற்கு ஈடுகட்டுவாரா கோலி? ஸ்டீவ் வாஹ் பதில்

விராட் கோலி இப்போது கிரிக்கெட் உலகின் சிறந்த பேட்ஸ்மென் ஆனாலும் அவர் வரும் நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தன் பேட்டிங் திறமையை நிரூபிக்க வேண்டியுள்ளது என்று முன்னாள் ஆஸி. கேப்டன் ஸ்டீவ் வாஹ் தெரிவித்துள்ளார்.

“அவர் தன் மீதே கொஞ்சம் அழுத்தத்தை ஏற்றிக் கொள்வார், ஆஸி.யில் வெற்றி பெற்றுவிட்டால் அவருக்கு நிச்சயம் இது இன்னொரு மகுடமே. இந்தியாவில் ஸ்டீவ் ஸ்மித் நம்ப முடியாத வகையில் கடந்த முறை 3 டெஸ்ட் சதங்களை எடுத்தார், ஆனால் விராட் கோலி ரன்கள் எடுக்கவில்லை (46 ரன்கள்), இது அவருக்கு பெருமை சேர்க்காது. எனவே ஆஸ்திரேலியாவில் அவர் ஸ்டீவ் ஸ்மித்துடன் கணக்குத் தீர்த்துக் கொள்வார்.

விராட் கோலி இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானவர். எங்கு போனாலும் நன்றாக ஆடக்கூடிய உத்தி அவரிடம் உள்ளது. அவரிடமும் ஏ.பி.டிவிலியர்ஸிடமும் நல்ல உத்தி உள்ளது. டிவிலியர்ஸ் இப்போது ஆடுவதில்லை. அதனால் கோலிதான் இப்போது கோலோச்சுகிறார்.

ஸ்டீவ் ஸ்மித் உண்மையில் ஒரு ரன்பசி மனிதர்தான் ஆனால் அவர் சமீபமாக ஆடாததால் நிச்சயம் விராட் கோலி உலக கிரிக்கெட்டில் முதன்மை பேட்ஸ்மென். பிரையன் லாரா, சச்சின் டெண்டுல்கர், விவ் ரிச்சர்ட்ஸ், ஜாவேத் மியாதாத் போன்ற பெரிய வீர்ர்கள் பெரிய நிகழ்வு, தொடருக்காக காத்திருந்து தங்களின் சிறந்தவற்றை வெளிக்கொணர்பவர்கள்.

ஆஸ்திரேலிய அணி பாசிட்டிவாக ஆடி 300-350 ரன்களை எடுத்து விட்டால் கோலியை நெருக்கடிக்குள்ளாக்கலாம். பெரிய ஸ்கோர்கள் அவரது பேட்டிங்கில் நிச்சயம் பிரச்சினைகளை ஏற்படுத்தும். கடந்த தொடரில் ஸ்டீவ் ஸ்மித் விராட் கோலியை முழுதும் ஆதிக்கம் செலுத்தினார், அவரை ரன்கள் எடுக்கவில்லை, எனவே ஆஸ்திரேலியா கையில்தான் உள்ளது விஷயம்” என்றார் ஸ்டீவ் வாஹ்.

Google+ Linkedin Youtube