“நமக்குள் இருக்கும் மனிதத்தன்மையை நாம் இழந்துவிடக் கூடாது” - கெளதமி

‘நமக்குள் இருக்கிற மனிதத்தன்மையை நாம் இழந்துவிடக் கூடாது’ என நடிகை கெளதமி தெரிவித்துள்ளார்.

சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாதா 87’. விஜய்ஸ்ரீ இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.


இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கெளதமி பேசும்போது, “இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் முக்கியமான செய்தி பற்றிப் பலரும் பேசினார்கள். ‘பெண்களைக் கொடுமைப்படுத்தினால், அவர்களைக் கொளுத்த வேண்டும்’ என்பதுதான் அந்தச் செய்தி.

சினிமா என்று எடுத்துக்கொண்டால், நாடகத்தனமும் கலந்திருக்கும். சில விஷயங்களைப் பெரிதுபடுத்திக் காட்டினால் நிறைய பேரிடம் சென்றுசேரும் என்பது தவிர்க்க முடியாத ஒரு உண்மை. அதை நாம் எல்லோரும் ஒப்புக் கொள்கிறோம். கதையைச் சொல்லும்போது அதைப் பயன்படுத்துகிறோம்.

நிஜ வாழ்வில் மிகப்பெரிய பிரச்சினை. பிரச்சினை மட்டுமல்ல, நம்மைச் சுற்றி சமுதாயத்தில் கொடூரமான நிலை உருவாகியுள்ளது. இதற்கு எவ்வளவு கொடூரமாக ஒரு பதில் சொன்னாலும் கொடுத்தாலும் போதாது. ஆனால், அந்த ஒரு பதில், அந்த ஒரு தண்டனை கொடுக்கும்போது, நமக்குள் இருக்கிற மனிதத்தன்மையை நாம் இழந்துவிடக் கூடாது” என்றார்.

Google+ Linkedin Youtube