முதல் பார்வை: கோலமாவு கோகிலா

நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாயைக் காப்பாற்ற வெவ்வேறு வடிவங்களில் பாடுபடும் மகளின் கதையே 'கோலமாவு கோகிலா'.

ஹோம் அப்ளையன்ஸ் ஷோ ரூமில் வேலை பார்க்கும் நயன்தாரா மாதம் ரூ.14 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார். அப்பா ஏடிஎம் மையத்தில் வாட்ச்மேனாகப் பணிபுரிகிறார். தங்கை கல்லூரி படிக்கிறார். அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் மட்டுமே சம்பள உயர்வு கிடைக்கும் என்று மேலாளர் கூற, அந்த வேலையை உதறி எறிகிறார் நயன்தாரா. 22 ஆயிரம் சம்பளத்தில் மசாஜ் பார்லர் மேனேஜராக வேலைக்குச் சேர்கிறார். அந்த நேரத்தில்தான் அம்மா சரண்யா பொன்வண்ணன் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. வீட்டு அடமானம், கடன், என்.ஜி.ஓ என்று பல்வேறு முறைகளில் பணம் புரட்ட முயற்சி செய்தாலும் சிகிச்சைக்குரிய 15 லட்ச ரூபாயை ஏற்பாடு செய்ய முடியவில்லை. இந்த சூழலில் எதிர்பாராவிதமாக போதைப்பொருள் கடத்தும் இளைஞர் ஒருவரை நயன்தாரா இடித்துவிட, அவர் போலீஸில் மாட்டிக்கொள்கிறார். அந்தக் கும்பல் நயனையும், அவர் தங்கையையும் துரத்திப் பிடிக்கிறது. அதற்குப் பிறகு என்ன ஆகிறது, நயன்தாராவால் 15 லட்சம் ரூபாய் பணத்தைப் புரட்ட முடிகிறதா, அந்தக் கும்பலால் நயனுக்கு ஏற்படும் பிரச்சினைகள் என்ன, அதிலிருந்து தப்பிக்க முடிந்ததா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

நடுத்தரக் குடும்பத்தின் பணப் பிரச்சினையை, இயலாமையை, துணிச்சலை மிக சாதுர்யமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் நெல்சன். கொஞ்சம் பிசகினாலும் தடம் மாறிவிடக் கூடிய திரைக்கதைக்கு நகைச்சுவை இழையால் வலு சேர்த்து, குடும்பத்தை முன்னிறுத்தி அவர்கள் செய்யும் செயலைத் தர்க்க ரீதியாக நியாயப்படுத்துகிறார்.

வெள்ளந்தியாக இருக்கும் நயன்தாரா தனக்கு நிகழும் ஆபத்தை எப்படி சமாளிக்கப் போகிறார் என்று யோசித்தால் அதெல்லாம் எனக்கு சாதாரணமாக்கும் என்று சர்ப்ரைஸ் தருகிறார். தன்னைப் புத்திசாலியாக வெளிப்படுத்தும் தருணங்களில் சபாஷ் பெறுகிறார். 'நீங்க சுட்டாதான் போவேன்' என்று வினோத்திடம் சொல்லி அங்கேயே நகராமல் உறுதி காட்டுவது, 'எனக்கு கொலைன்னா பயம், நான் பின்னாடி போகும்போது சுடுங்க. அந்த சத்தத்தைக் கேட்டாப் போதும்' என சொல்வதுமாக நயன் அப்பாவி வெர்ஷனிலிருந்து அப்படியே மாறுவது ஆச்சரியம். இக்கட்டான சூழலில் தன் குடும்பத்தைக் காப்பாற்ற எடுத்துவைக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் செயலிலும் நயன் தடம் பதிக்கிறார்.

சரண்யா பொன்வண்ணன் நோயாளிக்குரிய அறிகுறிகளுடன், பாவப்பட்ட அம்மாவாக அடக்கி வாசித்திருக்கிறார். அந்த மெட்டார்டர் வேனில் படுத்த படுக்கையாக போலீஸுக்குப் போக்கு காட்டும் அவரது நடிப்பு அலப்பறை. அடியாளைப் புரட்டி எடுக்கும் முயற்சியிலும் தன் அக்மார்க் நடிப்பை அப்படியே அள்ளி வழங்குகிறார்.

பொறுப்புள்ள அப்பாவாகவும், தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று வருத்த வடுக்களைச் சுமந்து திரிபவராகவும் ஆர்.எஸ்.சிவாஜி பக்குவமான நடிப்பில் கவனிக்க வைக்கிறார்.

'எனக்கு இப்போ கல்யாண வயசுதான் வந்திடுச்சு' என்று ரொமான்ஸில் பின்னி எடுக்கும் யோகி பாபு நகைச்சுவையில் அசரவைக்கிறார். கடைக்காரச் சிறுவன், ஜாக்குலினை ஒருதலையாகக் காதலிக்கும் அன்பு ஆகியோருடனான கலந்துரையாடலில் சிரிக்க வைக்கிறார்.

ஸ்மைல் சேட்டை அன்பு, ஜாக்குலின், வினோத், ஹரீஷ் பெராடி, 'நான் கடவுள்' ராஜேந்திரன், சரவணன், நிஷா, சீனு மோகன் ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.

சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவும், அனிருத்தின் இசையும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. கல்யாண வயசுப் பாடல் ரிப்பீட் கேட்க வைக்கிறது. பின்னணி இசை கதைக் களத்துக்கு மிகச் சரியாகப் பொருந்துகிறது.

படம் முழுக்க அழுகாச்சி காவியம் படைக்காமல் சிரித்துக்கொண்டே தீவிரத்தன்மையை உணர்த்தி உறவின் உன்னதம் பேசுகிறார் இயக்குநர் நெல்சன். பணத்தின் தேவையை, அது இல்லை என்று சொல்லும் உறவுகளை, நியாயமான முறையில் பணம் புரட்ட முடியாமல் தவிக்கும் தவிப்பை அப்படியே கனகச்சிதமாக திரையில் கொண்டு வந்திருக்கிறார். தடம் மாறும் நயன்தாரா தடுமாறாமல், எந்த இடத்திலும் சிக்கிக்கொள்ளாமல் தப்பிப்பது நம்பும்படியாக இல்லை. ஒரே மெட்டார்டர் வேனில் திரும்பத் திரும்ப வலம் வரும் நயன் அண்ட் கோ எப்படி போலீஸிடம் இருந்து தப்பிக்கிறது என்ற கேள்விக்குப் பதில் இல்லை. போனில் போலீஸுக்குப் போட்டுக்கொடுக்கும் கடத்தல் கும்பலைச் சார்ந்த இளைஞரைக் கொலை செய்யும் வினோத்திடம், அருகில் இருக்கும் இன்னொரு இளைஞரையும் கொலை செய்யச் சொல்வது ஏன்? அந்த எல்லைக்கு நயன்தாரா எப்படித் தயாராகிறார், அவர் கதாபாத்திரம் எப்படி பரிமாணம் அடைகிறது என்பதை எங்கும் நியாயப்படுத்தவில்லை.

ஆனாலும், ஒரு நாயகனை முன்னிறுத்தி குடும்பத்துக்காக தான் செய்யும் வேலையை நியாயப்படுத்தும் ராபின் ஹூட் கதாபாத்திரங்களுக்கு மத்தியில், நாயகியை மையப்படுத்தி பிரச்சினைக்கான தீர்வின் வேர்களைத் தேடிப் பயணிக்கச் செய்த 'கோலமாவு கோகிலா' தவிர்க்க முடியாத படம்.

Google+ Linkedin Youtube