முதல் பார்வை: லக்‌ஷ்மி

தன் கனவுடன் குருவின் கனவுக்காகவும் சேர்த்து டான்ஸ் ஆடும் சிறுமியின் கதையே 'லக்‌ஷ்மி'.

வங்கியில் வேலை செய்யும் நந்தினியின் (ஐஸ்வர்யா ராஜேஷ்) மகள் லக்‌ஷ்மி (தித்யா). அம்மாவுக்கு இசை, நடனம் என்றால் அறவே பிடிக்காது. மகள் லக்‌ஷ்மிக்கு பேச்சு, மூச்சு, அசைவு, ஆர்வம், முயற்சி, பயிற்சி எல்லாமே நடனம்தான். இந்திய அளவில் மிகப் பெரிய நடனப்போட்டி ஒன்று நடைபெற இருப்பதை தொலைக்காட்சி மூலம் அறிந்துகொள்ளும் லக்‌ஷ்மி அதில் பங்கேற்க வேண்டும் என்ற ஆவலில் சென்னை டான்ஸ் அகாடமியில் சேர நினைக்கிறாள். ஆனால், பெற்றோருடன் வந்தால்தான் அங்கு சேர முடியும் என்று நிபந்தனை விதிக்கப்படுகிறது. இதனிடையே பள்ளிக்குப் போகும் வழியில் காபி ஷாப்பில் இசைக்கும் இசையால் உற்சாகமாகி அங்கேயே ஆட ஆரம்பித்து, அந்த காபி ஷாப் உரிமையாளர் கிருஷ்ணாவுடன் (பிரபுதேவா) பேசிப் பழகும் லக்‌ஷ்மி அவரை அப்பாவாக நடிக்கச் சொல்கிறாள். அதன்மூலம் டான்ஸ் அகாடமியில் சேர்கிறாள். ஆனால், போட்டியில் கலந்துகொள்வதற்கு லக்‌ஷ்மி தகுதி பெறவில்லை. இதனால் கலங்கி நிற்கும் லக்‌ஷ்மியை கிருஷ்ணா தேற்றி, டான்ஸ் அகாடமியில் அவரைத் தேர்வு செய்ய பரிந்துரைக்கிறார்.

உண்மையில் யார் இந்த கிருஷ்ணா, அவர் சொன்னவுடன் எப்படி லக்‌ஷ்மியைத் தேர்வு செய்கிறார்கள், இதனால் கிருஷ்ணாவுக்கு விதிக்கப்படும் நிபந்தனை என்ன, ஏன் நந்தினி தன் மகளை டான்ஸ் ஆடக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கிறாள், அம்மாவுக்கே தெரியாமல் ஏன் லக்‌ஷ்மி டான்ஸ் ஆடுகிறாள், தன் கனவை லக்‌ஷ்மியால் அடைய முடிந்ததா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

நடனத்தை மையமாகக் கொண்டு ஒரு முழுப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் விஜய். அதில் சில தருணங்களை உணர்வுப்பூர்வமாக்கி நெகிழ வைத்திருக்கிறார்.

அலட்டிக்கொள்ளாமல் அளவாக நடிப்பது பிரபுதேவாவின் இயல்புதான். ஆனால், எமோஷலான சில காட்சிகளிலும் அந்த அளவைக் கடைப்பிடித்திருப்பது நெருடல். நீங்க இதை நடனம்னு சொல்றீங்க, நான் இதை மூச்சுன்னு சொல்வேன் என கவிதையை நடனமாகக் காட்சி ரீதியாக வெளிப்படுத்தும் விதத்தில் பிரபுதேவா அசத்துகிறார். தன் மாணவர்களுக்கு மூச்சுப் பயிற்சியின் அவசியத்தை உணர்வை, ஆற்றலை வெளிக்கொணர்ந்து பெஸ்ட் பெர்பாமன்ஸை கொண்டுவரச் செய்வதில் சிறந்த மாஸ்டர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

தித்யா தமிழ் சினிமாவின் புதுவரவு. காபி ஷாப், பஸ் ஸ்டாப், சாவு மேளம், சாலை என இடம் பொருள் பற்றிக் கவலைப்படாமல் எனர்ஜியுடன் டான்ஸ் ஆடும் விதத்தில் கவனம் ஈர்க்கிறார். குருவின் ஏக்கத்தையும் தனக்கான கனவாக மாற்றிக்கொள்ளும் இடத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு படத்தில் பெரிய முக்கியத்துவம் இல்லை. கிடைத்த இடங்களில் தன்னை தக்கவைத்துக் கொண்டார். கருணாகரனைப் படத்தில் வீணடித்திருக்கிறார்கள். கோவை சரளாவின் கதாபாத்திரம் சரியாகக் கட்டமைக்கப்படவில்லை. ஆனாலும், தன் பாவனைகளால் அப்பாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.

அர்ஜுனாக நடித்திருக்கும் ஜீத் தாஸும், அர்னால்டாக நடித்திருக்கும் அக்‌ஷத் சிங்கும் சிரிப்பைப் படர விட்டு, நடனத்தில் வெளுத்து வாங்குகிறார்கள். போட்டிக்கு சவால் விட்டு எதிர்வினையாற்றும் சல்மான் யூசுஃப்கான் கச்சிதமான தேர்வு.

சென்னை- மும்பை நகரங்களின் அழகை கண்களுக்கும் கடத்தி இருக்கும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா கதையிலும் பங்களிப்பு செய்திருக்கிறார். சாம் சி.எஸ். இசையில் ஆலா ஆலா, புலியாட்டம் பப்பரப் பப்பா, இறைவனே இறைவனே உந்தன் அருள்பொழிவாயா பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. உயிரோட்டமான பின்னணி இசையால் படத்தைத் தூக்கி நிறுத்துகிறார். ஆண்டனியின் எடிட்டிங் நேர்த்தி.

இந்தி ரியாலிட்டி டான்ஸ் ஷோவில் சூப்பர் டான்ஸராகப் பின்னி எடுத்த தித்யாவைக் கதையின் நாயகியாக்கி அவர் கதாபாத்திரத்தின் பெயரையே படத்தின் டைட்டிலாக வைத்திருக்கிறார் இயக்குநர் விஜய். டான்ஸ் மாஸ்டர் கதபாத்திரத்தில் பிரபுதேவாவை நடிக்க வைத்து கதாபாத்திரத் தேர்வில் தேர்ந்த இயக்குநருக்கான திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். சென்னை நடனக்குழுவில் டான்ஸ் ஆடத் தெரிந்த அக்‌ஷத் சிங், ஜீத் தாஸ் ஆகியோரைப் பயன்படுத்தி இருக்கும் விதம் பாராட்டுக்குரியது.

ஆனால், காட்சிகளில் நம்பகத்தன்மை இல்லாமல் நாடகப் பணியே மேலோங்கி இருப்பது உறுத்தலாக இருக்கிறது. தித்யா எதேச்சையாக காபி ஷாப்பில் நுழைவது, அங்கு இருக்கும் இசையின் லயத்திற்கேற்ப ஆடுவது, அதை உரிமையாளர் அனுமதிப்பது, பின் அவரே டான்ஸ் அகாடமியில் சேர்ப்பது எல்லாம் செயற்கையாகவே உள்ளது. பள்ளி முதல்வர்- தித்யா காட்சிகளும் நம்பும்படி இல்லை.

தித்யாவின் தந்தை யார் என்பதற்கும் படத்தில் பதில் இல்லை. பிரபுதேவாவின் கடந்த கால வாழ்க்கையையும் போதுமான அளவுக்குச் சொல்லப்படவில்லை. மிக முக்கியமான பிரிவுக்கான காரணத்தை வசனங்களிலேயே கடந்துபோவது ஏற்புடையதாக இல்லை. இவற்றைத் தாண்டி, கடைசி 25 நிமிட உணர்வுப்பூர்வ தருணங்கள் லக்‌ஷ்மியுடன் ஒரு ஒட்டுதலை ஏற்படுத்துகின்றன. மேடையில் இருக்கும் ஆணிகளை அப்புறப்படுத்தும் தித்யா அண்ட் கோவின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. கிளைமேக்ஸ் காட்சி அழுத்தத்தின் உச்சம்.

Google+ Linkedin Youtube