குஜராத் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் கைது

 22  ஆண்டுகளுக்கு முந்தைய போதை மருந்து வழக்கில் முன்னாள் குஜராத் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை குஜராத் காவல்துறை சிஐடி பிரிவு கைது செய்துள்ளது.

கடந்த 1996-ம் ஆண்டில் சஞ்சீவ் பட், பனாஸ்காந்தா காவல் நிலையத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்தார். அப்போது 1.5 கிலோ போதைப் பொருளை வைத்திருந்ததாக ராஜஸ்தானைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அப்போது பலான்பூரில் உள்ள ஹோட்டல் அறையில் இருந்து போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது. அதை வழக்கறிஞர் சுமர் சிங் ராஜ்புரோகித் தன் வசம் வைத்திருந்ததாகக் கூறி அவரை பனாஸ்காந்தா காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆனால் ராஜ்புரோகித், ராஜஸ்தானில் உள்ள அவரின் வீட்டில் இருந்து கடத்தப்பட்டதும், போதைப் பொருள் பொட்டலத்தை பனாஸ்காந்தா காவல்துறையே வைத்ததும் பின்பு அம்பலமானது. வழக்கறிஞரை சிக்க வைத்ததாக சஞ்சீவ் பட் உள்ளிட்ட காவல்துறையினர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்க குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த ஜனவரியில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து சஞ்சீவ் பட் மீதான விசாரணை புத்துயிர் பெற்றது. தற்போது சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டுள்ளார். சஞ்சீவுடன் சில காவலர்களும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

முன்னதாக, குஜராத் கலவர வழக்கு தொடர்பாக பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வந்த சஞ்சீவ் பட் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இதன் பிறகு குஜராத் பாஜக அரசை விமர்சித்து சமூகவலைதளங்களில் அவர் கடுமையாக பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Google+ Linkedin Youtube