தெலங்கானா சட்டப்பேரவை கலைக்கப்படுகிறது: ஆளுநருக்குப் பரிந்துரை செய்தார் முதல்வர் சந்திரசேகர் ராவ்

தேர்தலை முன்கூட்டியே சந்திக்கும் வகையில், தெலங்கானா சட்டப்பேரவையை கலைப்பதற்கான தீர்மானத்தை அமைச்சரவையில் நிறைவேற்றிய, முதல்வர் சந்திரசேகர் ராவ், அதை ஆளுநருக்குப் பரிந்துரை செய்தார்.

இதையடுத்து, ஆளுநர் இ.எல். நரசிம்மன் முதல்வரின் பரிந்துரையை ஏற்று, சட்டப்பேரவை கலைக்கப்பட்டதாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான அரசின் பதவிக்காலம் முடிய இன்னும் ஒரு ஆண்டு இருக்கிறது, இருந்தாலும், இந்த ஆண்டு இறுதியில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலோடு சேர்த்து தெலங்கானா மாநிலத் தேர்தலையும் நடத்த சந்திரசேகர் ராவ் திட்டமிட்டுள்ளார்.

இதையடுத்து, இன்று காலை தெலங்கானா அமைச்சரவை முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையில் கூடி ஆலோசனை நடத்தியது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில், சட்டப்பேரவையை கலைக்கப் பரிந்துரை செய்ய தீர்மானம் செய்யப்பட்டது.

அதன்பின், முதல்வர் சந்திரசேகர் ராவ் அந்த தீர்மானத்தை ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மனைச் சந்தித்து அளித்துள்ளார். தெலங்கானா சட்டப்பேரவை கலைக்கப்பட்டதற்கான முறைப்படியான அறிவிப்பை ஆளுநர் நரசிம்மன் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, நேற்று ஆளுநர் நரசிம்மன் தலைமைச் செயலாளர் எஸ்.கே. ஜோஷி, தலைமை ஆலோசகர் ராஜீவ் சர்மா, முதன்மை செயலாளர் எஸ்.நரசிங் ராவ், சட்டப்பேரவைச் செயலாளர் நரசிம்மஆச்சார்யலு ஆகியோரை அழைத்து மாநிலத்தின் சூழல், சட்டம் ஒழுங்கு, நிர்வாகம் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தினார்.

நாளை ஹஸ்னாபாத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் சந்திரசேகர் ராவ் பங்கேற்கிறார். அதன்பின் அடுத்த 50 நாட்களுக்குத் தொடர்ந்து பிரஜாலா ஆசீர்வாத சபா என்றபெயரில் 100 பொதுக்கூட்டங்களை நடத்த முதல்வர் சந்திரசேகர் ராவ் திட்டமிட்டுள்ளார்.

Google+ Linkedin Youtube