நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய ‘ஏ’ அணி இன்னிங்ஸ் வெற்றி

விஜயவாடா,

முதலில் ஆடிய நியூசிலாந்து ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 211 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. பின்னர் ஆடிய இந்திய ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 447 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக அங்கித் பாவ்னே 162 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இதைத்தொடர்ந்து 2–வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து ‘ஏ’ அணி 3–வது நாள் ஆட்டம் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 104 ரன்கள் எடுத்து இருந்தது. ஜீத் ராவல் 41 ரன்னுடனும், ஹென்றி நிகோல்ஸ் 55 ரன்னுடனும் களத்தில் நின்றனர்.

நேற்று 4–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது.  தொடர்ந்து ஆடிய ஜீத் ராவல் 47 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள்.  நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ஹென்றி நிகோல்ஸ் அதிகபட்சமாக 74 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். நியூசிலாந்து ‘ஏ’ அணி 2–வது இன்னிங்சில் 79.3 ஓவர்களில் 210 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. இதனால் இந்திய ‘ஏ’ அணி இன்னிங்ஸ் மற்றும் 26 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய ‘ஏ’ அணி தரப்பில் கரண்சர்மா 5 விக்கெட்டும், ‌ஷபாஸ் நதீம் 4 விக்கெட்டும், ‌ஷர்துல் தாகூர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இந்த வெற்றியின் மூலம் இந்திய ‘ஏ’ அணி 2–0 என்ற கணக்கில் போட்டி தொடரை வென்றது. முன்னதாக நடந்த முதல் போட்டியில் இந்திய ‘ஏ’ அணி இன்னிங்ஸ் மற்றும் 37 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

Google+ Linkedin Youtube