பலாத்காரத்துக்கு ஆளான கன்னியாஸ்திரியின் நடத்தையை இழிவுபடுத்திய எம்எல்ஏ: தேசிய மகளிர் ஆணையம் கொதிப்பு

கேரளாவில் பாதிரியாரால் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் கன்னியாஸ்திரியின் நடத்தையை மிகமோசமாக இழிவுபடுத்திப் பேசிய எம்எல்ஏ பி.சி.ஜார்ஜுக்கு தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் கோட்டயம் அருகே குருவிளங்காடு பகுதியில் ஒரு தேவாலயத்தில் இருந்த கன்னியாஸ்திரியை பாதிரியார் பிராங்கோ கடந்த 2014 முதல் 2016-ம் ஆண்டுவரையிலான காலங்களில் பல முறை பலாத்காரம் செய்தார் என்று புகார் கூறப்பட்டுள்ளது.

தற்போது இந்தப் பாதிரியார் பிஷப்பாக ஜலந்தரில் உள்ளார். கன்னியாஸ்திரியின் புகாரையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புகார் அளித்து 70 நாட்களுக்கு மேல் ஆகியும் பாதிரியார் கைது செய்யப்படவில்லை எனக் கூறி பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக ஏராளமான அமைப்புகள், கன்னியாஸ்திரிகள் நேற்று போராட்டம் நடத்தினார்கள்.

இதற்கிடையே கோட்டயம் மாவட்டம், பூஞ்சார் சட்டப்பேரவைத் தொகுதி சுயேட்சை எம்எல்ஏ பி.சி. ஜார்ஜ் ஊடகங்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது, பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் நடத்தை குறித்து மிக மோசமாக விமர்சனம் செய்தார்.

அவர் பேசுகையில், “எனக்கு இந்த கன்னியாஸ்திரியின் நடத்தை மீது சந்தேகம் இருக்கிறது. 12 முறை பாதிரியார் தன்னைப் பலாத்காரம் செய்தார் என்று அந்த கன்னியாஸ்திரி புகாரில் தெரிவித்துள்ளார், ஏன் முதல் முறை பலாத்காரம் செய்யப்பட்டவுடன் தெரிவிக்காமல் தாமதமாகக் கூறுகிறார்” என்று மோசமாக விமர்சித்தார்.

எம்எல்ஏ பி.சி.ஜார்ஜின் பேச்சுக்குத் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், “ எம்எல்ஏ ஜார்ஜ் கன்னியாஸ்திரி குறித்து விமர்சித்துள்ளதைக் கேட்டு மிகவும் வெட்கப்படுகிறேன். பெண்களுக்கு உதவுவார்கள் என்று பதவி அளித்த எம்எல்ஏக்கள் பெண்களை அவமதிக்கிறார்கள். இந்த விவகாரத்தைத் தேசிய மகளிர் ஆணையம் ஏற்கனவே கையில் எடுத்து விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸ் டிஜிபிக்கு கடிதம் எழுதி இருக்கிறேன்.

நான் தனிப்பட்ட முறையில் சென்று பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியை சந்தித்தேன். பிஷப் பிராங்கோவுக்கு எதிராகத் தொடர்ந்து அவர் போராட்டம் நடத்துகிறார், பிஷப் பிராங்கோவை எதிர்த்த காரணத்தால் அந்த கன்னியாஸ்த்ரீக்கு உதவித்தொகை, மானியம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

Google+ Linkedin Youtube