தெலங்கானாவில் சோகம்: பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 7 குழந்தைகள் உள்பட 34 பேர் பலி

தெலங்கானா மாநிலம், ஜக்தியால் மாவட்டத்தில் அரசுப் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 குழந்தைகள் உள்ளிட்ட 34 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்தில் பலியானவர்கள் பெரும்பாலும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலங்கானா மாவட்டம், ஜக்தியால் மாவட்டம், கொண்டாங்காட்டுப் பகுதியில் உள்ள மலைக்கோயிலில் இன்று முக்கியத் திருவிழாவாகும். இதனால், ஏராளமான மக்கள் மலைக்கோயிலுக்குச் சென்றனர்.

 

இந்நிலையில், சனிவராம்பேட்டை கிராமத்தில் இருந்து 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஜக்தியால் நகருக்கு  இன்று காலை 11 மணி அளவில் அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டது. கொண்டகாட்டு மலைப்பகுதி வழியாக முத்தயாம்பேட்டை கிராமத்தைக் கடந்து பேருந்து வந்தது. அப்போது மலைப்பகுதியில் 3-வது கொண்டைஊசி வளைவில் பேருந்து திரும்பும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து, உருண்டது.

இந்த விபத்தில் பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகள் பலர் தூக்கி வீசப்பட்டனர். பேருந்துக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த மற்ற வாகனங்களில் வந்தவர்கள் பஸ் விபத்தில் சிக்கியதைப் பார்த்ததும் உதவிக்கு ஓடினார்கள்.ஆனால், பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து, உருண்டதில் சம்பவ இடத்திலேயே 7 குழந்தைகள் உள்ளிட்ட 34 பேர் பலியானார்கள்.

போலீஸாருக்கும், தீயணைப்புப் படையினருக்கும் அங்கிருந்தவர்கள் உடனடியாக தகவல் அளித்தனர். பேருந்து விபத்தை நேரில் பார்த்தவர்கள், பேருந்துக்குள் சிக்கி இருந்தவர்களையும், காயமடைந்தவர்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் காயமடைந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் ஜக்தால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

ஹைதராபாத் வடக்குமண்டல போலீஸ் ஐஜிபி ஒய் நாகி ரெட்டி பிடிஐக்கு அளித்த பேட்டியில், "ஜக்தியால் விபத்தில் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. பலி மேலும் உயரும் என நினைக்கிறோம். காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் ஜக்தியால், கரீம்நகர் மாவட்ட மருத்துவமனைகளில் சிகச்சை பெற்று வருகிறார்கள்" எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள், மற்றும் முதல் கட்ட தகவலில்,  பேருந்தில் அளவுக்கு அதிகமாகப் பயணிகள் கூட்டம் இருந்தது விபத்துக்குக் காரணமாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், 3-வது கொண்டைஊசிய வளைவில் பேருந்து திரும்பிய போது, திடீரென்று பேருந்து இயல்பு நிலைக்கு வராமல் திரும்பிய வேகத்திலேயே பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. பேருந்து வலதுபுறமாகத் திரும்பியவுடன் அனைத்துப் பயணிகளும் ஒரே பக்கமாக சாய்ந்ததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்தது. பெரும்பாலான பயணிகள் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால், ஏற்பட்ட மூச்சுத்திணறலால் இறந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

ஜக்தியால் மாவட்ட ஆட்சியர் ஏ. சரத், போலீஸ் எஸ்.பி. சிந்து சர்மா, கரீம்நகர் போலீஸ் ஆணையர் கமல்ஹாசன் ரெட்டி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு மீட்புப் பணியைத் துரிதப்படுத்தினார்கள்.

இந்த விபத்து குறிந்து அறிந்ததும் முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆழ்ந்த வருத்தமும்,வேதனையும் அடைந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் மருத்துவர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Google+ Linkedin Youtube