“கடைசி வரைக்கும் காமெடியன் தான்”: யோகி பாபு

‘கடைசி வரைக்கும் காமெடியனாகத்தான் நடிப்பேன். ஹீரோவாக நடிக்கவே மாட்டேன்’ என யோகி பாபு தெரிவித்தார்.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாகத் திகழ்ந்து வருகிறார் யோகி பாபு. விஜய்யுடன் ‘சர்கார்’, அஜித்துடன் ‘விஸ்வாசம்’, ‘100% காதல்’, ‘குப்பத்து ராஜா’, ‘பரியேறும் பெருமாள்’ உள்ளிட்ட பல படங்கள் இவர் கைவசம் உள்ளன.

இன்றைய நிலையைப் பொறுத்தவரை, தமிழ் சினிமாவில் பிஸியாக இருக்கும் ஒரே காமெடியன் இவர்தான். முன்னணி ஹீரோக்கள் தொடங்கி, இளம் நடிகர்கள் வரை யோகி பாபுவைத் தங்கள் படங்களில் நடிக்க வைக்க ஆசைப்படுகின்றனர். நயன்தாரா கூட தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் யோகி பாபு இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார்.

இந்நிலையில், யோகி பாபு ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. ‘டார்லிங்’, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இந்தப் படத்தை இயக்கப் போகிறார் என்றும் அந்தச் செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், யோகி பாபு இதை மறுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தான் அந்தப் படத்தில் காமெடியனாக மட்டுமே நடிப்பதாகவும், ஆனால் படம் முழுக்க வருவேன் என்றும் கூறியுள்ளார். வெளிநாட்டுக்காரர் ஒருவருக்கும் நாய்க்கும் இடையிலான கதைதான் அந்தப் படம் என்று தெரிவித்துள்ள யோகி பாபு, தான் அதில் கூர்க்கா வேடத்தில் நடிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்கு ஹீரோவாக நடிக்கும் ஆசை இல்லை என்றும், கடைசி வரைக்கும் காமெடியனாகத்தான் நடிப்பேன் என்றும் யோகி பாபு கூறியிருக்கிறார்.

Google+ Linkedin Youtube