முதல்வர் எடப்பாடி மீதான ஊழல் புகார்; லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான திமுக கொடுத்துள்ள ஊழல் புகார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை தினசரி நடத்திய விசாரணை அறிக்கையை சீலிட்ட கவரில் வைத்து தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக அமைப்பு செயலாளரும், எம்.பி.-யுமான ஆர்.எஸ்.பாரதி கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். அந்த புகாரில், தமிழகத்தின் பெருமபாலான நெடுஞ்சாலைத்துறை கட்டுமான மற்றும் பராமரிப்புப் பணிகள், திட்டங்களில் முறைகேடு நடந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த திட்டங்களை முதல்வர் பழனிசாமியின் சம்பந்தி பி. சுப்பிரமணியம், உறவினர் நாகராஜன், செய்யாத்துரை, நண்பர் சேகர்ரெட்டி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் வெங்கடாஜலபதி அண்ட் கோ, ஸ்ரீ பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட், எஸ்.பி.கே. அண்ட் கோ நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ரூ.4800 கோடி மதிப்பிலான டெண்டர்களை ஒதுக்கியதன் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவியையும், முதலமைச்சர் பதவியையும் தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோத ஆதாயம் அடைந்துள்ளதாக குறிப்பிட்டு அதனடிப்படையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை 1988-ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13-ன் கீழ் தண்டிக்க வேண்டும் என புகாரில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு மீது தமிழக லஞ்ச ஒழிப்புதுறை நடவடிக்கை எடுக்காததால், தங்கள் புகாரில் வழக்கு பதிந்து விசாரணை செய்து முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

முதலில் ஆர்.எஸ் பாரதி தரப்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ இந்த வழக்கில் தனது வாதத்தை வைத்தார். அவரது வாதம்:

“ஒரு திட்டத்துக்கு 704 கோடி மதிப்பிலான டெண்டர்களின் மதிப்பு 1517 கோடியாக கொடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தரமான சாலையை கிலோமீட்டருக்கு 8 கோடியில் அமைக்க முடியும். ஆனால் பெருமளவிலான தொகையில் டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளது. சம்பந்திகள், உறவினர்கள், நண்பர் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

உண்மைகளை ஆராயாமல் அறிக்கை தாக்கல் செய்கின்றனர். முகாந்திரம் இருந்தால் வழக்குபதிவு செய்ய வேண்டும், ஆனால் வரைவு அறிக்கையை விஜிலென்ஸ் ஆணையருக்கு அனுப்பியதாக சொல்கிறார்கள். ஆரம்பகட்ட விசாரணை முடிந்தால் வழக்கு பதியவேண்டுமா? வேண்டாமா? என விசாரணை அதிகாரியே முடிவு செய்யவேண்டும்.

யாரிடமும் கலந்தாலோசிக்க கூடாது. முதல்வர், துணை முதல்வர், இரு அமைச்சர்களுக்கு எதிரான புகாரில் எவ்வித நடவடிக்கையும் லஞ்ச ஒழிப்புத்துறை எடுக்கவில்லை. ” என்று வாதிட்டார்

அப்போது குறிக்கிட்ட நீதிபதி ஜெகதீஷ்சந்திரா , உறவினர் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டதா என விசாரித்தீர்களா? லஞ்ச ஒழிப்பு துறையில் உள்ள வல்லுநர் குழு டெண்டர் நடைமுறைகளை ஆய்வு செய்ததா? என விளக்கமளியுங்கள் என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த லஞ்ச ஒழிப்பு துறை தரப்பு அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் கூறியதாவது:

“டெண்டர் மதிப்பு உயர்த்தப்படவில்லை. உறவினர்களுக்கு டெண்டர் ஒதுக்கியது என்பது அடிப்படை முகாந்திரம் கிடையாது. டெண்டர் ஒதுக்கபட்ட நிறுவனங்கள் 1991-லிருந்தே நெடுஞ்சாலை துறை டெண்டர்களை எடுத்துள்ளனர்.

எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் டெண்டரில் பங்கேற்று உள்ளனர். அந்த 25 ஆண்டுகள் அனுபவம் அடிப்படையிலேயே டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த டெண்டர் முறை annuity tender முறையில் ஒதுக்கப்பட்டுள்ளது. அதை உலக வங்கியும் கண்காணித்து வருகிறது.

சாலையை அமைத்து 8 ஆண்டுகளுக்கு பராமரிக்க வேண்டியதற்கான டெண்டர்தான் விடப்பட்டுள்ளது. 7 வது ஆண்டில் அவர்கள் சாலையில் மேற்புறத்தை முழுமையாக புதுப்பிப்பதும் டெண்டர் நடைமுறையில் உள்ளது.

டெண்டர் மதிப்பை கூட்டி வழங்கியதாக கூறுவது முழுதும் தவறு. டெண்டருக்கான தொகை 6 மாதத்துக்கு ஒருமுறை உலக வங்கியால் விடுவிக்கப்படும். நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தியுள்ளோம். புகாரில் விசாரணை மேற்கொண்டு அதை சீலிட்ட கவரில் தாக்கல் செய்துள்ளோம்.

அதில் தான் வழக்குபதிவு செய்ய முகாந்திரம் உள்ளதா இல்லையா என்பது தெரியவரும். மனுதாரர் புகார் அளித்தார் என்பதற்காக உடனடியாக வழக்குப்பதிவு செய்யமுடியாது. விசாரணை அதிகாரி அறிக்கையை பொறுத்து விஜிலென்ஸ் ஆணையர் என்ன முடிவெடுக்கிறாரோ அதன்படித்தான் செயல்பட முடியும்.

தற்போதைய நிலையில் மனுதாரரின் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. ஏனென்றால் விசாரணை நடத்தவில்லை என வழக்கு தொடர்ந்தார். நாங்கள் ஜூன் 22 தொடங்கி விசாரணை நடத்தியுள்ளோம். ஆரம்பகட்ட விசாரணை நடத்த அரசிடம் ஒப்புதல் பெற வேண்டுமென ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

முதல்வர் மீதான குற்றச்சாட்டுக்களை கூறி, வழக்கு பதிவு செய்யுங்கள் என கூறமுடியாது.”என்று தெரிவித்தார்.

இதையடுத்து ஆர்.எஸ். பாரதி புகாரில் தினசரி அடிப்படையில் மேற்கொண்ட விசாரணை குறித்த அறிக்கையை பதில் மனுவாக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி வழக்கை மீண்டும் செப்டம்பர் 17-க்கு ஒத்திவைத்தார்.

Google+ Linkedin Youtube