கரப்பான்பூச்சிக்கு காததூரம் ஓடுபவர்கள் மத்தியில்7000 பூச்சியைத் திருடிய இளைஞர்: அமெரிக்க மியூசியத்தில் சுவாரசியம்

நம்மில் பெரும்பாலானோர் கரப்பான்பூச்சி, தேள், சிலந்திகளைக் கண்டு காத தூரம் ஓடிவிடுவோம். ஆனால் அமெரிக்காவின் பிலடெல்பியா பூச்சிகள் அருங்காட்சியகம் மற்றும் பட்டாம்பூச்சிகள் காட்சியகத்தில் இருந்த சுமார் 7,000 சிறு உயிரினங்களைத் திருடியவர்களுக்கு அதுகுறித்து எந்த பயமும் இல்லை.

ஆகஸ்ட் மாத இறுதியில் நடந்த இந்தத் திருட்டில் 7,000 பூச்சிகள், சிலந்திகள் மற்றும் பல்லிகள் காணாமல் போய்விட்டன. இதனால் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 80% உயிரினங்கள் களவுபோயுள்ளன.

     

இதுகுறித்துப் பேசிய அருங்காட்சியக உரிமையாளர் ஜான் கேம்பிரிட்ஜ், ''முதலில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த உயிரினங்கள் இல்லாததைத்தான் கவனித்தோம். சிறிது நேரத்தில் கண்காட்சியில் வைக்கப்படாத உயிரிகள் இருக்கும் சேமிப்பு அறையும் திறந்துகிடந்ததைக் கண்டுபிடித்தோம். உடனே சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்தோம்.

அப்போதுதான் களவு போன உயிரிகளின் மொத்த விவரமும் தெரிந்தது'' என்று தெரிவித்துள்ளார்.

சிசிடிவி வீடியோ பதிவில் ஊழியர்களின் சீருடை அணிந்து ஐந்து பேர் வருகின்றனர். ஒருவர் பெரிய ஐரோப்பியச் சிலந்திகளைப் பிடிக்கிறார். மற்றொருவர் தொட்டியைத் திறந்து சிலந்தியை எடுக்கிறார். அதைத் தன்னிடமுள்ள சிறிய பெட்டியில் போட்டுக்கொண்டு நடந்துசெல்கிறார்.

அடுத்த நிமிடத்துக்கு உள்ளாக, பார்வையாளர்கள் வருகின்றனர். உடனே அவர்கள் ஊழியர்கள்போல வேலையைத் தொடர்கின்றனர். சில நிமிடங்களில் அவர்கள் அனைவரும் கொண்டுவந்த பெட்டிகளில் அனைத்து உயிரிகளையும் அடைக்கின்றனர். அவசரகால வெளியேறும்வழி மூலமாக வெளியே வரும் அவர்கள் தங்களின் சொந்த வாகனங்களில் பறக்கிறார்கள்.

இதுகுறித்து ஊழியர்களைச் சந்தேகிக்கிறார் ஜான் கேம்பிரிட்ஜ். அதுசரி பூச்சிகளையும், புழுக்களையும் கொண்டுபோய் என்ன செய்யப் போகிறார்கள்?

கேம்பிரிட்ஜ் சொல்லும் தகவல் நம்மை அதிரவைக்கிறது.

''வளர்ந்த, ஆரோக்கியமான ஐரோப்பிய நீலச் சிலந்தியின் விலை ரூ.25, 500-க்கும் மேல். மெக்ஸிக சிலந்திகளின் விலை ரூ.18,000க்கும் அதிகம். காண்டாமிருக கரப்பான்பூச்சி ஜோடி ரூ.36,500-ஐத் தாண்டும்.

இதுபோல அருங்காட்சியகத்தில் காணாமல் போன உயிரினங்களின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.22 லட்சத்தில் இருந்து ரூ.36 லட்சத்தைத் தொடும். இதுதான் உலகிலேயே அதிகபட்ச வாழும் பூச்சிகள் அருங்காட்சியகத் திருட்டு.

இதனால் அருங்காட்சியகம் உள்ள மூன்று தளங்களில் ஒன்று மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. அதில் பட்டாம்பூச்சிகளின் காட்சியகம் உள்ளது. விரைவில் புதிய உயிரிகளுடன் அருங்காட்சியகத்தை மீண்டும் உயிர்ப்பிப்போம்'' என்கிறார் கேம்பிரிட்ஜ்.

காவல்துறை விசாரணையில் ஐரோப்பிய சிலந்தி ஒன்று மட்டும் முன்னாள் ஊழியரின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்றவைகளைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Google+ Linkedin Youtube