முந்த்ரா கடன்களால் வங்கிகளுக்கு நெருக்கடி: ரகுராம் ராஜன் எச்சரிக்கை

பெரும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை வங்கிகளுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி வாராக்கடன்களாக உருவெடுத்துள்ளதைபோலவே, முந்த்ரா, விவசாயக் கடன்களும் நெருக்கடியை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.

வாரக்கடன்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வு செய்து வருகிறது. இதற்கான நாடாளுமன்ற மதிப்பீட்டுக்குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை அறிக்கைகளாக சமர்பித்து வருகின்றனர். இதில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனும் அறிக்கை அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:


‘‘வாரக்கடன்கள் என்பது இந்திய வங்கிகளை மிக அதிகஅளவில் பாதித்துள்ளன. வாரக்கடன் என்பது வங்கிகளுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. 2006-2008 காலக்கட்டத்தில்தான் அதிக அளவில் வாராக்கடன்கள் உருவாகின. மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்ட, பொருளாதார வளர்ச்சி வலுவாக இருந்த காலத்தில்தான் வாராக்கடனும் அதிகரித்துள்ளது.

பெரும் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட கடன்கள் தற்போது வாராக்கடன்களாக உருவெடுத்துள்ளன. 2015-ம் ஆண்டு தற்போதைய மத்திய அரசு பிரதமர் முந்த்ரா கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் 6.37 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. பொதுத்துறை, கிராமப்புற வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் இந்த திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு இந்த கடன்களை வழங்கியுள்ளன.

முந்த்ரா மற்றும் விவசாயிகள் கடன் அட்டை திட்டத்தின் மூலம் வாரக்கடன் அபாயம் ஏற்பட வாய்ப்புண்டு. இது மேலும் ஒரு பிரச்சினையை உருவாக்கலாம். வங்கிகளின் கடன் சுமை அதிகரித்து வருவதால் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் விவகாரத்தில் வங்கிகளை அரசியல் கட்சிகள் வற்புறுத்தக் கூடாது’’ எனக் கூறினார்.

Google+LinkedinYoutube