‘‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்றார் பிரதமர் மோடி; ஆனால் என் மகளுக்கு...’’ - பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான மாணவியின் தாய் கண்ணீர்

பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள், அவர்களை பாதுகாப்போம் என பிரதமர் மோடி கூறினார், ஆனால் என் மகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கூறியுள்ளார்.

ஹரியாணா மாநிலம் கைரனாவில் நேற்று கோச்சிங் வகுப்பு சென்று கொண்டிருந்தபோது, மாணவியை ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்ற கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. பாலியல் பலகாரத்துக்கு ஆளான மாணவி சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, குடியரசு தலைவர் பதக்கம் பெற்றவர்.

கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்ட அந்த மாணவியை அவரது கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தொடர்ந்து தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெற்றோர் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த சம்பவத்துக்கு ஹரியாணா மாநில எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பாலியல் பலாத்கார விவகாரத்தில் பாஜக அரசு மெத்தனத்துடன் செயல்படுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் பூபேந்தர் ஹூடா குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கூறுகையில் ‘‘சிபிஎஸ்இ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக பிரதமர் மோடியிடம் விருது பெற்றவர் எனது மகள். ஆனால் எனது மகளை பாலியல் பலாத்காரம் செய்த கும்பலுக்கு எதிராக போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.

‘பெண்களை படிக்க வையுங்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்போம்’ என மோடி கூறுகிறார். ஆனால் எங்கள் மகளுக்கு இந்த கதி நேர்ந்தது எப்படி. என் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்’’ என கூறியுள்ளனர்.

Google+ Linkedin Youtube