ரஷ்யா - சீனா கூட்டு ராணுவப் பயிற்சி: அதிர்ச்சியில் உலக நாடுகள்

ரஷ்யாவும், சீனாவும் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருப்பது ஐரோப்பியா உள்ளிட்ட உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள  செபீரியா மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் ’வோஸ்டாக் 2018’  என்ற பெயரில் ரஷ்யா ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்தக் கூட்டு ராணுவப் பயிற்சி செப்டம்பர் 11 முதல் 17 வரை நடக்கிறது.

இதில் ரஷ்யாவைச் சேர்ந்த 3 லட்சத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் ரஷ்யா நடத்தியுள்ள இந்த ராணுவப் பயிற்சியில் சீனாவும் பங்கேற்றுள்ளதுதான் தற்போது  உலக நாடுகளிடையே ஒருவிதப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவுடன் இணைந்து ரஷ்யா நடத்தியுள்ள இந்த ராணுவப் பயிற்சி அமெரிக்காவுக்கு பதிலடியாக இருந்தாலும், சீனா மற்றும் ரஷ்யா இணைந்து உலக நாடுகளுக்கு தங்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் ராணுவப் பயிற்சி உள்ளதாக ராணுவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சீன அதிகாரிகள் தரப்பில், "இந்தக் கூட்டு ராணுவப் பயிற்சியின் நோக்கம், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் ரஷ்யா - சீனா இடையே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாக பரஸ்பர நம்பிக்கையாக நடத்தப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய பிரதிநிதி ஒருவர் இந்தக் கூட்டு ராணுவப் பயிற்சி குறித்து கூறும்போது, "சமீபத்திய ஆண்டுகளாக ரஷ்யா, சீனா இடையே பாதுகாப்பு சார்ந்து ஒத்துழைப்புகள் அதிகரித்து வருவது சிறிய நாடுகளை பதற்றமடையச் செய்துள்ளன" என்றார்.

Google+ Linkedin Youtube