7 வேடங்களில் ராதிகா நடிக்கும் ‘சந்திரகுமாரி’ சீரியல்

‘சந்திரகுமாரி’ சீரியலில், 7 வேடங்களில் ராதிகா சரத்குமார் நடிக்க இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

ராதிகா இரண்டு வேடங்களில் நடித்துவரும் சீரியல் ‘வாணி ராணி’. 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த சீரியல், தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. எனவே, அடுத்ததாக ‘சந்திரகுமாரி’ என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கிவிட்டார் ராதிகா.

   

ராதிகாவின் ரடான் மீடியா ஒர்க்ஸ் தயாரிக்கும் ‘சந்திரகுமாரி’ சீரியல், பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது. இந்த சீரியலில், 7 வேடங்களில் நடிக்கிறார் ராதிகா. சரித்திரமும் சமூகமும் மாறி மாறிப் பயணிக்கும் வித்தியாசமான சீரியலாக இது உருவாகி வருகிறது.

சென்னை மற்றும் மும்பையில் மிகப்பெரிய செட்டுகள் போட்டு இந்த சீரியல் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அரச குடும்பம் சார்ந்த கதையை, ‘பாட்ஷா’ படத்தின் இயக்குநரான சுரேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். நிகழ்காலக் காட்சிகளை சி.ஜே.பாஸ்கர் இயக்குகிறார்.

‘தாமிரபரணி’ படத்தில் விஷால் ஜோடியாக நடித்த பானு, இதில் ராதிகாவின் மகளாக நடிக்கிறார். நிரோஷா, உமா ரியாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சிற்பி இசையமைக்கும் இந்த சீரியலுக்கு, பாலமுருகன் மற்றும் பிலிப் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்கின்றனர்.

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் நான்கிலும் இந்த சீரியல் தயாராகி வருகிறது. அக்டோபர் மாத இறுதியில் இருந்து இந்த சீரியலை ஒளிபரப்ப முடிவு செய்துள்ளனர். திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு சன் டிவியில் ‘சந்திரகுமாரி’ ஒளிபரப்பாகும்.

Google+ Linkedin Youtube