முதல் பார்வை: சாமி ஸ்கொயர்

பெற்றோர் மரணத்துக்குக் காரணமானவர்களை 28 ஆண்டுகளுக்குப் பிறகு பழிவாங்கும் மகனின் கதையே 'சாமி ஸ்கொயர்'.

ஐஏஎஸ் தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காகக் காத்திருக்கும் ராம் சாமி (விக்ரம்) மத்திய அமைச்சரிடம் (பிரபு) மேனேஜராகப் பணிபுரிகிறார். பிரபுவுக்கு ரவுடி ராவணப் பிச்சை (பாபி சிம்ஹா) தொடர்ந்து மிரட்டல் விடுக்கிறார். பணத்துக்காக அமைச்சர் மகளை (கீர்த்தி சுரேஷ்) கடத்த, அடுத்த அரை மணிநேரத்தில் அவரை மீட்டு பத்திரமாக வீட்டில் சேர்க்கிறார். எதிர்பார்த்த மாதிரியே இருவருக்குள்ளும் பட்டாம் பூச்சி பறக்க, காதல் முளைக்கிறது. அதற்கு அமைச்சர் தடையாக நிற்கிறார். ஐஏஸ் ஆக பயிற்சி பெறும் ராம் சாமி திடீரென்று ஐபிஎஸ் ஆக வந்து நிற்கிறார். ஏன் இந்த திடீர் மாற்றம், அமைச்சரின் தடையை மீறி காதல் வென்றதா, பெருமாள் பிச்சையின் மகன்கள் என்ன ஆகிறார்கள் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

சாமி படம் வந்து 15 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும், அந்தப் படத்துக்கான பரபரப்பை இரண்டாம் பாகத்திலும் பற்ற வைத்திருக்கிறார் இயக்குநர் ஹரி. அவரின் தொழில் நேர்த்தி அசர வைக்கிறது.

அப்பா ஆறுச்சாமி, மகன் ராம் சாமி என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் விக்ரம். ஆறுச்சாமி கதாபாத்திரம் திரைக்கதையின் முக்கியக் கண்ணி. ராம் சாமியாக விக்ரம் தோற்றத்திலும் தோரணையிலும் கெத்து காட்டுகிறார். சண்டைக் காட்சிகளில் தெறிக்க விடுபவர், நடனக் காட்சிகளிலும் ரசிக்க வைக்கிறார். படம் முழுக்க படத்தைத் தன் தோள்களில் தூக்கிச் சுமக்கும் அளவுக்கு கமர்ஷியல் நாயகனுக்கான கச்சிதம் காட்டியிருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் சில காட்சிகளில் நடித்திருந்தாலும் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். வலிந்து திணிக்கப்பட்ட அவரது பிரமாண மொழி மட்டும் அந்நியப்பட்டு நிற்கிறது.

கீர்த்தி சுரேஷ் சின்னச் சின்ன அசைவுகளில் கூட திறமையான நடிகை என்பதை நிரூபித்திருக்கிறார். பிரச்சினையிலிருந்து மீட்ட தருணத்தில் விக்ரமைப் பார்க்கும் கண் ஜாடையில் ஒட்டுமொத்தக் காதலையும் லாவகமாக வெளிக்கொணர்வது ரசனை. காதல், பிரிவு, சோகம் என அத்தனை உணர்வுகளையும் மிக அழகாகப் பிரதிபலிக்கிறார்.

சூரியின் நகைச்சுவை சுத்தமாக எடுபடவில்லை. அதுவே படத்தின் பாதகமான அம்சம். பாபி சிம்ஹா மெச்சத்தகுந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

பிரபு தன் கதாபாத்திரத்துக்குப் போதிய நியாயம் செய்திருக்கிறார். ஜான் விஜய்க்குப் படத்தில் எந்த வேலையும் இல்லை. அலட்டலுன் வந்து போகிறார்.

ஓ.ஏ.கே சுந்தர், டெல்லி கணேஷ், சுமித்ரா, சாம்ஸ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ்கான், சஞ்சீவ், ரமேஷ் கண்ணா, சுதா சந்திரன் ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.

ப்ரியன், வெங்கடேஷ் அங்குராஜின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம் சேர்க்கிறது. தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் இனிக்கவில்லை. மொளகாப் பொடியே, புது மெட்ரோ ரயில் ஆகிய இரு பாடல்களும் வேகத்தடை. வி.டி.விஜயனின் எடிட்டிங் நேர்த்தி.

'சாமி ஸ்கொயர்' ஹரியின் 15-வது படம். போலீஸ் படமாக என்றால் 5-வது படம். குடும்பம், ரவுடி, போலீஸ் என்றே படம் எடுத்துப் பழக்கப்பட்ட ஹரி தன் வழக்கமான கமர்ஷியல் மசாலாவை இதிலும் சரியாகக் கலந்து கொடுத்திருக்கிறார். சாமி படம் வந்து 15 ஆண்டுகள் ஆனதால், ஒரு முன்னோட்டத்துடனே படத்தை ஆரம்பித்த அவரது உத்தி புத்திசாலித்தனமானது. கதையிலும் கவனம் செலுத்தி இருக்கும் விதம் பாராட்டுக்குரியது.

பழனியில் ஒரு காதல் ஜோடிக்காக சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தும் காட்சி மட்டும் சிங்கம் படத்தின் சாயலில் இருந்தது. கோட்டா சீனிவாச ராவ் மறைவுக்குப் பிறகு அவரது மகன்கள் திருநெல்வேலியில் தலையெடுப்பதாகக் கதை பின்னியிருக்கும் விதம் திரைக்கதை ஓட்டத்துக்கு சரியாகப் பொருந்துகிறது. ஆனால், நகைச்சுவை என்ற பெயரில் இருக்கும் சில காட்சிகளை தாராளமாகக் கத்தரிக்கலாம்.

வில்லன்களைச் சொல்லிச் சொல்லியே பழிதீர்க்கும் படலத்தில் ஓ.ஏ.கே. சுந்தருக்கு வைக்கப்படும் குறி மட்டும் தப்பாமல் எடுபட்டது. மற்ற சண்டைக் காட்சிகள், மிரட்டல்கள், துரத்தல்கள் பழைய பாணியிலேயே இருக்கிறது. பீஹார், ராஜஸ்தான், குஜராத் என்று வெவ்வேறு மாநிலங்களில் கிளைமாக்ஸ் வைப்பதை ஹரி இப்போது வழக்கமாகிக் கொண்டிருக்கிறார் போல. பழக்கப்பட்ட பழிதீர்க்கும் படம்தான் என்றாலும், அதில் சோர்வையோ அலுப்பையோ வரவழைக்காமல் 'சாமி ஸ்கொயர்' விறுவிறுப்பை விதைத்து நிமிரச் செய்கிறது.

Google+ Linkedin Youtube