அகங்காரம் பிடித்த காங்கிரஸ்; ராஜஸ்தான், ம.பி. தேர்தலில் கூட்டணி இல்லை: மாயாவதி திடீர் போர்க்கொடி

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் நடைபெறவு உள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று ஏற்கனவே மாயாவதி அறிவித்துவிட்டு, அஜித் ஜோகியுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்க ஆயத்தமாகியுள்ளார்.

இந்நிலையில், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் தலித் வாக்குகளைக் கவர மாயாவதியை மிகவும் காங்கிரஸ் எதிர்பார்த்த நிலையில், தற்போது திடீரென ஒருமுடிவை எடுத்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி டெல்லியில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

சத்தீஸ்கர் மாநிலத்தில் நாங்கள் அஜித் ஜோகியுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கிறோம். ராஜஸ்தான், மத்தியப்பிரதேச மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போகிறோம். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போவதில்லை.

பகுஜன் சமாஜ் கட்சிக்கு சில இடங்களை மட்டும் கொடுத்துவிட்டு காங்கிரஸ் கட்சி எங்களை அழிக்கத் திட்டமிடுகிறது. ராஜஸ்தானில் 200 தொகுதிகளில் 9 இடங்களையும், மத்தியப்பிரதேசத்தில் 230 இடங்களில் 30 இடங்களையும் எங்களுக்கு ஒதுக்குவதாக காங்கிரஸ் கூறுகிறது.

எப்போதெல்லாம் நாங்கள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறோமோ அப்போதெல்லாம், எங்கள் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு மாறுகிறது. பாஜகவை அழிக்கிறோம் என்ற பெயரில் பிஎஸ்பி போன்ற சிறிய கட்சிகளை துடைத்தெறிய காங்கிரஸ் கட்சி முயல்கிறது. காங்கிரஸ் கட்சி அகங்காரத்துடன் செயல்படுகிறது.

நாங்கள் காங்கிரஸ், பாஜகவுக்கு பணிந்து செல்லமாட்டோம், தனித்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போகிறோம். காங்கிரஸ் கட்சி மோசமான நிலையில் இருக்கிறது. குஜராத் போல நெருக்கடி தர நினைக்கிறது.

அதேசமயம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜகவால் மீண்டும் ஆட்சி அமைக்க இயலாது. அதனால்தான் நாங்கள் அஜித்ஜோகியுடனான மாநில கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.

பாஜக போன்ற வகுப்புவாத கட்சியை ஒழிக்க காங்கிரஸ் கட்சியுடன் இணைய தயாராக இருக்கிறோம். ஆனால், காங்கிரஸ் கட்சி எங்களை முதுகில் குத்துகிறது. தாஜ்காரிடர் வழக்கில் என்னை காங்கிரஸ் கட்சி சிக்கவைத்தது, ஆனால், உச்ச நீதிமன்றம் என்னை விடுவித்தது காத்தது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, சோனியாகாந்தி ஆகியோர் சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் எங்களுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடத்தான் விரும்புகிறார்கள். ஆனால், காங்கிரஸ் எம்.பி.யும் முன்னாள் முதல்வரான திக்விஜய் சிங் சிபிஐ, அமலாக்கப்பிரிவு விசாரணைக்குப் பயந்து காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சியை சேரவிடாமல் தடுக்கிறார்.

திக்விஜய் சிங்கின் சுயலாபம் காரணமாகவே கோவா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மை இருந்தும் ஆட்சி அமைக்க முடியாமல்போனது. திக்விஜய் சிங் பாஜகவின் ஏஜென்ட். இதை காங்கிரஸ் மூத்ததலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலத்தில் தனித்து நிற்கும் எங்கள் முடிவு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மட்டுமே நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது எங்கள் முடிவை அறிவிப்போம்

இவ்வாறு மாயாவதி பேசினார்.

Google+ Linkedin Youtube