ஓபிஎஸ் ஒப்புக்கொள்வார்; அதற்கான சூட்சுமம் எனக்குத் தெரியும்: தினகரன்

மயிலாப்பூரில் யாரோ ஒருவர் சொன்ன அறிவுரையால் தான் துணை முதல்வர் ஓபிஎஸ் எல்லாச் செயல்களையும் செய்வதாக, டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளருமான டிடிவி  தினகரன் இன்று (சனிக்கிழமை) பெங்களூரு சிறையிலுள்ள சசிகலாவைச் சந்தித்தார்.

அதன்பின், தினகரன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

“பிப்ரவரி 7, 2017 அன்று ஓபிஎஸ், ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் மேற்கொண்டார். அதற்கு மறுநாளே, நான் தான் அவரை ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தியதாக ஊடகங்களிடம் ஒப்புக்கொண்டார். அன்றைக்கு என்னை தினகரன் ‘சார்’ என ஓபிஎஸ் சொன்னார். இப்போது நான் நாகரிகமில்லாமல் நடந்துகொள்வதாகக் கூறுகிறார்.

எங்கள் குடும்பத்தினரின் பிடியில் அதிமுக சிக்கக் கூடாது என்று கூறியவர், ஏன் என்னை ரகசியமாக வந்து சந்திக்க வேண்டும்? என்னைப் பார்க்க வேண்டும் என ஒரு மாத காலமாக கேட்டுக் கொண்டிருந்தார். அவர் கூறிய பொதுவான நண்பர் ஓபிஎஸ்ஸுக்கு தான் நண்பர், எனக்குத் தெரிந்தவர் மட்டுமே. அதனால், அந்த நண்பர் யார் என ஓபிஎஸ் தான் கூற வேண்டும்.

அதன்பிறகு, ஒன்றரை வருடமாக என்னிடம் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்த ஓபிஎஸ் அதே நண்பர் மூலம் கடந்த செப்டம்பர் மாத இறுதியில், மீண்டும் என்னைச் சந்திக்க வேண்டும் எனவும், ஈபிஎஸ்ஸை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு என்னை அப்பதவியில் அமர்த்த வேண்டும் எனவும் விரும்புவதாகக் கூறியுள்ளார். எங்களைக் குறை கூறி வேறொரு இடத்திற்குச் சென்று விட்ட பிறகு மீண்டும் எங்களைப் பார்ப்பதாகக் கேட்பது அசிங்கம். அதனால், நான் அவரைப் பார்க்க மறுத்தேன்.

என்னைப் பார்த்தேன் என இப்போது ஓபிஎஸ் ஒப்புக்கொண்டார் அல்லவா? அதேபோல் மீண்டும் என்னைச் சந்திக்கக் கேட்டுக் கொண்டதையும் ஒப்புக்கொள்ள வைக்கிறேன். அதற்கான சூட்சுமம் எனக்குத் தெரியும். ஒப்புக்கொள்கிறாரா என 3 மாதங்கள் பொறுத்து பார்ப்போம்.

முதல்வர் பழனிசாமிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்ததா ஓபிஎஸ்ஸின் ராஜ விசுவாசம்? குறுக்கு வழியில் முயற்சி செய்வதுதானே அது. மயிலாப்பூரில் உள்ள யாரோ ஒருவர் சொன்ன அறிவுரையால் தானே இவற்றையெல்லாம் செய்தார். மயிலாப்பூரில் அந்த நபரை ரகசியமாக ஓபிஎஸ் சந்தித்தார்.

பன்னீர்செல்வம் துரோக சிந்தனை கொண்டவர். இப்போது அமைச்சர்களாக இருக்கும் எஸ்.பி.வேலுமணியும், தங்கமணியும் நான் துணை முதல்வராக இருக்க வேண்டும் எனக் கோரினர். அதற்கு நான் மறுத்தேன்''.

இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.

Google+LinkedinYoutube