முதல் பார்வை: நோட்டா

முதல்வர் பதவியை விருப்பமே இல்லாமல் ஏற்றுக்கொள்ளும் ஒரு இளைஞன், அந்தப் பதவிக்கு ஆபத்து வந்தால் அதை எப்படி எதிர்கொள்கிறான் என்பதே 'நோட்டா'.

தமிழக முதல்வரும் மமக கட்சித் தலைவருமான வினோதன் (நாசர்) ஒரு ஊழல் வழக்கில் சிக்குகிறார். சிபிஐ இந்த வழக்கை விசாரிக்கும் நிலையில், தன் பதவியைத் தூக்கி எறிவதாகவும், விசாரணை முறையாக நடைபெறுவதற்குத்தான் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அறிவிக்கிறார். அதேசமயம், ஊழல் வழக்கில் நிரபராதி என்று தீர்ப்பு வந்த பிறகே முதல்வர் பதவியில் அமர்வேன், அதுவரை என் மகன் வருண் (விஜய் தேவரகொண்டா) முதல்வராக இருப்பார். இது என் தனிப்பட்ட முடிவு அல்ல, கட்சியின் முடிவு என்று சாமர்த்தியமாகக் காய் நகர்த்துகிறார். லண்டனில் படித்துவிட்டு நண்பர்களுடன் மது போதையில் சுற்றித் திரியும் விஜய் தேவரகொண்டா ஆளுநர் மாளிகையில் முறைப்படி முதல்வராக பதவியேற்றுக் கொள்கிறார். அதற்குப் பிறகுதான் முதல்வர் பதவி என்பதற்கான அதிகாரம், கம்பீரம், பொறுப்பு, சவால் என எல்லாம் தெரியவருகிறது. ஒவ்வொரு படிநிலையாய் தன்னை தக்கவைத்துக்கொள்ளப் போராடும் போது ஆபத்துகள் அதிகரிக்கின்றன. அந்த சவால்களை, ஆபத்துகளை எப்படி அணுகுகிறார் என்பதே திரைக்கதையாய் விரிகிறது.

சமகால அரசியலில் உள்ள முக்கிய நிகழ்வுகளை துணிச்சலுடன் காட்சிப்படுத்திய விதத்தில் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் கவனிக்க வைக்கிறார். ஆனால், ஓர் அரசியல் படத்துக்கு அதுமட்டும் போதாதே.

ஒரு மாநிலத்தின் முதல்வர் மகன் என்ற எண்ணமே இல்லாமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றும் இளைஞராக, எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத டேக் இட் ஈஸி இளைஞராய் விஜய் தேவரகொண்டா தன் கதாபாத்திரத்தில் பொருந்திப் போகிறார். முதல்வர் பதவி ஏற்க நேரம் குறித்திருக்கும் சாமியார் குறித்துக் கேள்விப்பட்டவுடன் பொங்கி எழுந்து விமர்சனம் செய்யும் விதம் அவரின் பொறுப்பை எடுத்துரைக்கிறது. பேருந்தில் ஒரு சிறுமியின் மரணத்துக்காக ஆளும் கட்சி என்றும் பாராமல் விஜய் செய்தியாளர்களிடம் பேசும் விதம் ரவுடி சி.எம். என்ற அடைமொழிக்கு வழிவகுக்கிறது. விபரீதம் புரிந்து ஆபத்து உணர்ந்து அடுத்தடுத்து அந்தக் கதாபாத்திரத்துக்குள் ஆழச்சென்று பொறுப்புள்ள மனிதராக தன்னை நிறுவிக்கொள்ளும் இடத்தில் சபாஷ் பெறுகிறார்.

மெஹ்ரீனுக்குப் படத்தில் பெரிதாக எந்த வேலையும் இல்லை. நிருபர் என்று இரண்டு காட்சிகளில் முகம் காட்டியிருப்பவர், நடுநிலைவாதியாக தன்னை பிரதிநிதித்துவம் செய்துகொள்கிறார்.

பார்த்துப் பழகிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார். சின்னச் சின்ன விஷயங்களுக்கும் அவர் கொடுக்கும் ரியாக்‌ஷன்கள் ரசிகர்கள் இடத்தில் நின்று கொடுப்பதான பாவனையிலேயே அமைந்துள்ளது.

நாசர் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். படத்தின் கதை நகர்த்தலுக்கு மிக முக்கியமான கருவியாகச் செயல்பட்டிருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர் பக்குவமான நடிப்பால் மனதில் நிறைகிறார். எதிர்க்கட்சித் தலைவரின் மகள் கயல் வரதராஜனாக சஞ்சனா நடராஜனின் நடிப்பு பக்குவம்.

சந்தானகிருஷ்ணன் ரவிச்சந்திரனின் ஒளிப்பதிவு தரம். சாம் சி.எஸ்.இசையில் பாடல்கள் ஒட்டவில்லை. பின்னணி இசை படத்தின் பரபரப்போடு ஒன்றிப்போகிறது. ரேமண்ட் கச்சிதமாக எடிட்டிங் செய்திருக்கிறார்.

தந்தை கைதுக்குப் பிறகு நடக்கும் கலவரத்தை அடக்க உள்ளிருப்புப் போராட்டம் என்ற உத்தியை விஜய் தேவரகொண்டா எடுப்பது பலன் அளிக்கிறது. போதை மருந்தை உட்கொண்ட பிறகு ஒரு இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்த அது விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்ட குறும்படம் என்று பல்டி அடித்து நம்ப வைப்பது நல்ல ஐடியா.

செம்பரம்பாக்கம் ஏரி நீரைத் திறந்து விடுதல், முதல்வர் கோமா நிலை, கூவத்தூர் ரிசார்ட் விடுதி, நம்பிக்கை வாக்கெடுப்பு, வெள்ள மீட்புப் பணி என தலைப்புச் செய்திகளாக தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்ற நிகழ்வுகள் காட்சிகளாக உள்ளன. ஆனால், இவை எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் வெறுமனே கடந்துபோகும் அளவுக்கே திரைக்கதை பலவீனமாக உள்ளது. நடப்பு சம்பவங்களைக் காட்டினாலே ரசிகர்கள் கைத்தட்டி ஆர்ப்பரிப்பார்கள் என்று இயக்குநர் நினைத்திருக்ககூடும். ஆனால், அது எடுபடாமல் போனதுதான் சோகம்.

ரொம்பக் குனியாதீங்க, அப்புறம் சிலையைத் தப்பா செஞ்சிடுவீங்க, காலில் விழும் கலாச்சாரம் என அரசியல் களத்தில் நடக்கும் விஷயங்களை நய்யாண்டி செய்திருக்கும் விதம் ரசனை.

உள்ளிருப்புப் போராட்டம் என்று அறிவித்த பிறகு அதைக் கொஞ்சம் கூட மதிக்காமல் சுவரேறிக் குதித்துவிட்டு ஊர் சுற்றுவது விஜய் தேவரகொண்டாவின் பாத்திரப் படைப்பை கேள்விக்கு உள்ளாக்குகிறது. சஞ்சனா நடராஜனின் கதாபாத்திரம் இன்னதென்று சொல்ல முடியாத அளவுக்கு தெளிவின்மையோடு நகர்கிறது. நர்மதா கேரக்டரில் வரும் சிறுமியை வைத்துக்கொண்டு அரசியல் வெற்றி, சத்யராஜின் காதல், பெரிய பெரிய விஷயங்களைப் பேசுவது நம்பும்படியாக இல்லை. ஊழல் பணம், ஆன்மிகவாதி குறித்த காட்சிகளும் புரிதலுடன் கட்டமைக்கப்படவில்லை. விஜய் தேவரகொண்டா மீது பதியப்பட்ட கொலை வழக்கு என்ன ஆனது என்பதற்கும் பதில் இல்லை.

இவற்றை எல்லாம் சரிசெய்து அரசியல் விவகாரத்தில் அக்கறையையும், அழுத்தத்தையும் சேர்த்திருந்தால் 'நோட்டா' பெரும்பான்மையை நிரூபித்திருக்கும்.

Google+ Linkedin Youtube