சபரிமலை: பினராயி விஜயனை சந்திக்க மன்னர் குடும்பம், தந்திரி மறுப்பு: கேரள அரசின் முயற்சி தோல்வி

இதனால் கேரள அரசின் முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரி இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கடந்த 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பெண்களின் வழிபாட்டு உரிமையை பறிப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. எனவே சபரிமலை கோயிலுக்கு செல்லும் உரிமை அனைத்து வயது பெண்களுக்கும் உள்ளது’’என தீர்ப்பளித்தது.

தீர்ப்புக்கு, ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டுள்ளனர். கோட்டயம், சங்கனாச்சேரி உள்ளிட்ட இடங்களில் நேற்றும் போராட்டம் நடைபெற்றது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண கேரள அரசு முன் வந்துள்ளது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை திருவனந்தபுரத்தில் நாளை நடைபெறுகிறது. இதில் அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொள்ள உள்ளனர்.

ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத்தாக்கல் செய்யும் வரையில் பேச்சுவார்த்தையில் பங்கேற்கப்போவதில்லை என பந்தளம் அரச குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். அதுபோலவே சபரிமலை கோயிலில் பூஜை நடத்தி வரும் தந்திரி மற்றும் அவரது குடும்பத்தினரும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளப்போவதில்லை என அறிவித்துள்ளது. இதனால், கேரள அரசின் முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Google+ Linkedin Youtube