தொழில்நுட்பக் கோளாறு; 108 ஆம்புலன்ஸ் சேவை பாதிப்பு; தற்காலிக எண் அறிவிப்பு

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 108 ஆம்புலன்ஸ் எண் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தற்காலிக எண் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் விதமாக குடும்பநலம் மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் கடந்த 2008-ல் அண்ணா பிறந்த நாளையொட்டி அவசரகால ஆம்புலன்ஸ் சேவையான 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது.

ஆரம்ப காலத்தில் 15 ஊர்திகளுடன் தொடங்கப்பட்ட இத்திட்டம் இன்று 930 ஊர்திகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சாலை விபத்து ஏற்படும் பொழுது 13 நிமிடம் 40 நொடிகளில் சென்றடையும் வகையில் 108 ஆம்புலன்ஸ் சிறப்பாகச் செயல்படுகிறது. இது தேசிய சராசரியான 17 நிமிடத்தை விட மிகக் குறைவானதாகும்.

இதேபோன்று சென்னை நகரில் விபத்து நடந்த இடத்திற்கு 8.32 நிமிடத்தில் சென்றடையும் வகையில் உள்ளது.

நாள்தோறும் ஆயிரக்கணக்கானோருக்கு மருத்துவ சேவை செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் ஆம்புலன்ஸ் சேவை 108 என்கிற எண் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. விபத்துக்குள்ளானவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்புவது, பிரசவத்திற்கான சேவை, குழந்தைகளுக்கான சேவை என பலவித சேவைகளை ஆம்புலன்ஸ் மூலம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 108 என்கிற எண்ணை பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் இந்த எண் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆம்புலன்ஸை அழைக்கும் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தற்காலிகமாக ஒரு எண்ணை ஆம்புலன்ஸ் நிறுவனம் அளித்துள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 108 சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவசர சேவைக்கு 044-40170100 எண்ணில் தற்காலிகமாக தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆம்புலன்ஸ் மைய செயல்பாட்டு அதிகாரி பிரபுதாசனிடம் இந்து தமிழ் இணையதளம் சார்பில் கேட்டபோது,  “தொழில்நுட்பக்கோளாறு காரணமாக தற்காலிகமாக 108 சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதை சரி செய்யும் முயற்சி வேகமாக நடந்து வருகிறது அதுவரை பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தற்காலிக எண் ஒன்றை 044-40170100 வழங்கியுள்ளோம்.

ஆம்புலன்ஸ் சேவைக்கு பொதுமக்கள் அந்த எண்ணை பயன்படுத்தலாம். விரைவில் கோளாறு சரி செய்யப்பட்டவுடன் அது குறித்து அறிவிக்கிறோம்” என்று தெரிவித்தார்.

Google+ Linkedin Youtube