'தித்லி' புயல் வலுவடைந்து நாளை கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம்

ஒடிசா கரையருகே நிலைகொண்டுள்ள 'தித்லி' புயல் தீவிரமாக வலுவடைந்து நாளை காலை ஒடிசா அருகே கரையைக்கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று அளித்த பேட்டி:

''மத்திய வங்கக்கடலில் நிலைக்கொண்டிருக்கும் ‘தித்லி’ புயல் மேலும் வலுப்பெற்று தீவிரப் புயலாக தற்போது ஒடிசாவில் உள்ள கோபால்பூருக்கு தென்கிழக்கே சுமார் 320 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா அதை ஒட்டியுள்ள வடக்கு ஆந்திர கடற்கரை பகுதியில் கோபால்பூருக்கும், கலிங்கப்பட்டினத்துக்கும் அருகே நாளை (அக்.11) காலை கரையைக் கடக்கும்.

அரபிக்கடல் பகுதியில் உள்ள தீவிரப்புயல் லூபன் தற்போது ஓமன் கடற்கரையிலிருந்து 610 கி.மீ. தொலைவில் தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடும். மீனவர்கள் மத்திய மேற்கு, வடக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு அக்.11 வரை செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு 14-ம் தேதி வரை செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் சின்னக்கல்லாரியில் 10 செ.மீ. மழையும் வால்பாறையில் 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. அடுத்து வரும் 2 தினங்களில் தமிழகம் மற்றும் புதுவையில் லேசான மழை பெய்யும்''.

இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Google+ Linkedin Youtube