அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து 150% அதிக விலைக்கு நிலக்கரி இறக்குமதி செய்ய முயற்சி: ஸ்டாலின் கண்டனம்

அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து, 150 சதவீதம் அதிக விலை கொடுத்து ஒரு லட்சத்து பத்தாயிரம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய அதிமுக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “டெண்டர் விடாமல் அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து, 150 சதவீதம் அதிக விலை கொடுத்து ஒரு லட்சத்து பத்தாயிரம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய அதிமுக அரசு, கொள்ளை முடிவு செய்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாநிலமெங்கும் மின்வெட்டு வரப்போகிறது என்று பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற முறையில் முன்கூட்டியே எச்சரிக்கை செய்தும், அதிமுக அரசின் நிர்வாக அலங்கோலத்தால் ஒரு செயற்கையான நிலக்கரிப் பற்றாக்குறையை ஏற்படுத்தி இப்படியொரு கொள்ளை லாபம் அடிக்கும் நிலக்கரி இறக்குமதியில் அதிமுக அரசும், அமைச்சர் தங்கமணியும் ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கிறது.

இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து அதானி என்டர்பிரைசஸ் இறக்குமதி செய்யும் நிலக்கரி டன்னுக்கு 5008.45 ரூபாயும், ஸ்ரீ ராயல் சீமா என்ற கம்பெனிக்கு டன்னுக்கு 4936.25 ரூபாயும், யாசின் இம்பெக்ஸ் இந்தியாவுக்கு டன்னுக்கு 5 ஆயிரத்து 98 ரூபாயும் கொடுப்பதற்கு அதிமுக அரசு ஒப்புக்கொண்டு, டெண்டர் விட வேண்டும் என்ற விதிகளையும் தளர்த்தி கொள்முதலில் ஈடுபடுகிறது என்ற செய்தி இந்த அரசு உறக்கமின்றி ஊழல் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறது என்பது தெளிவாகிறது.

கோல் இந்தியா நிறுவனத்திடமிருந்து ஒரு டன் நிலக்கரி 2 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் நிலையில், அதிக விலை கொடுத்து அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து நிலக்கரியை வாங்குவது அதிமுக அரசின் கையாலாகாத்தனமாகத் தெரிகிறது.

சில தினங்களுக்கு முன்பு மின்துறை அமைச்சர் தங்கமணி மின்பகிர்மானக் கழகத்திடம் போதிய நிலக்கரி கையிருப்பு இருக்கிறது. நிலக்கரி பற்றாக்குறை ஏதுமில்லை என்று கூறினார். ஆனால் முதல்வரோ நிலக்கரி பற்றாக்குறை இருக்கிறது. உடனே நிலக்கரி ஒதுக்கீட்டை தமிழகத்திற்கு அதிகரியுங்கள் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதினார். மின்பகிர்மானக் கழகத்தில் நிலக்கரிப் பற்றாக்குறை இருக்கிறதா இல்லையா என்பதில் அமைச்சரவைக்குள்ளேயே முரண்பாடுள்ள நிலையில், தமிழ்நாடு டெண்டர் சட்ட விதிகளைத் தளர்த்தி, அதிக விலை கொடுத்து நிலக்கரியை வாங்க வேண்டிய நெருக்கடி ஏன் மின் பகிர்மானக் கழகத்திற்கு வந்தது?

நிலக்கரி இறக்குமதி பற்றி ஒரு தெளிவான கொள்கை மின்பகிர்மானக் கழகத்திடம் இல்லை என்று சிஏஜி அறிக்கையில் முன்கூட்டியே சுட்டிக்காட்டியும், நிலக்கரி இறக்குமதிக் கொள்கையை வகுக்காமல் இப்படி டெண்டர் விதிகளைத் தளர்த்துவது ஏன்?

அதானியின் கம்பெனிகள் ஏற்கெனவே தமிழ்நாடு மின்வாரியத்திற்கு தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த கம்பெனிகள் மீது மத்திய வருவாய் புலனாய்வுத்துறை விசாரணை நடக்கும்போது, மீண்டும் அதே கம்பெனியிடமிருந்து நிலக்கரி வாங்குவது ஏன்? தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத் தலைவரும், அரசின் மின்துறைச் செயலாளரும் எப்படி டெண்டர் இல்லாமல் நிலக்கரி வாங்க ஒப்புக்கொண்டார்கள்? என பல்வேறு கேள்விகள் வரிசையில் நிற்கின்றன.

அதிமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டில் சிக்கி, தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறது. காற்றாலை மின்சார ஊழல், நிலக்கரி கொள்முதல் ஊழல், மின்சாரம் கொள்முதல் ஊழல் என்று மெகா ஊழல்களின் நரகபூமியாக மின்பகிர்மானக் கழகம் மாறி நாறிக் கொண்டிருக்கிறது. நிலக்கரி கொள்முதல் ஊழல் பற்றி மத்திய தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டினாலும், எதிர்க்கட்சிகள் புகார் சொன்னாலும், நாங்கள் திருந்தவே மாட்டோம் என்று பிடிவாதமான முடிவு எடுத்து இப்போது மீண்டும் நிலக்கரி ஊழலில் ஈடுபடுவது கடுமையான கண்டனத்திற்குரியது.

ஆகவே டெண்டர் விதிகளைத் தளர்த்தி, முறைகேடுகள் மூலம் ஒரு லட்சத்து பத்தாயிரம் டன் நிலக்கரி வாங்குவதை அதிமுக அரசு உடனே கைவிட வேண்டும் என்றும், நிலக்கரி தேவை என்றால் வெளிப்படையான டெண்டர் மூலம் வாங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். இந்த கொள்ளைக்குத் துணைபோகும் அதிகாரிகளும் நிச்சயம் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டிய காலகட்டம் வரும்” என மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

Google+ Linkedin Youtube