சுவர்களுக்கிடையில் எலும்புக்கூடு: பால்கனியில் சுவரை இடித்த போது பயங்கர அதிர்ச்சி

புதுடெல்லி துவாரகா பகுதியில் வீட்டைப் புதுப்பிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது இரண்டு சுவர்களுக்கு இடையில் முளைத்திருந்த தாவரங்களை அகற்றும் பணியின் போது எலும்புக்கூடு புதைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.

எலும்புக் கூட்டைக் கண்டு பீதியில் உறைந்த 2 தொழிலாளர்கள் விஷயத்தை வீட்டு உரிமையாளரிடம் தெரிவிக்க அவர் உடனடியாக போலீஸுக்குத் தகவல் அனுப்பினார்.

நீலச்சட்டை அணிந்திருந்த ஒரு நபரின் எலும்புக்கூடு அது. பிப்ரவரி 2016 முதல் காணாமல் போனதாக தேடப்பட்டு வரும் 24 வயது ஜெயப்பிரகாஷ் என்பவரின் எலும்புகூடு அது என்று போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. உடனடியாக போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். ஜெயபிரகாஷின் மாமா தலைமறைவானதும் போலீஸ் தரப்பில் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.

ஜெயப்பிரகாஷ் மாமா விஜய் குமார் மஹாரானா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வீட்டின் உரிமையாளர் விக்ரம் சிங். இவருக்கு வயது 87. தாப்ரியின் சாணக்கியா பிளேசில் தான் வாடகைக்கு விட்ட 3வது தளத்தின் பால்கனியை பழுதுபார்க்க வேலைக்கு ஆட்களை அமர்த்தியிருந்தார். இவர் 2015-ல் வீட்டின் 3வது தளத்தை மேற்கு வங்கத்திலிருந்து வருவதாகத் தெரிவித்த விஜய் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

இவர் தன் உறவினர் ஜெய் உடன் இங்கு தங்கியிருந்துள்ளார், இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் இருவரும் வெளியில்தான் உணவு அருந்தி வந்துள்ளனர். இப்படியிருக்கையில் 2 மாதம் சென்ற பிறகு வீட்டு உரிமையாளரிடம் விஜய் தன்னுடன் தங்கியிருந்த மருமகன் ஜெய்யைக் காணவில்லை என்று தெரிவித்துள்ளார். வீட்டு உரிமையாளர் போலீசுக்கு தகவல் அளிக்குமாறு விஜய்யிடம் கூறியுள்ளார். இதனையடுத்து பிப்ரவரி 12, 2016-ல் காணவில்லை புகார் பதிவு செய்யப்பட்டது. ஜெய்யின் தாயாரும் மகனைக் காணாமல் பரிதவித்து வந்துள்ளார்.

மண், தாவரம் கேட்ட விஜய்:

இதே காலக்கட்டத்தில்தான் விஜய் வீட்டு உரிமையாளரிடம் கொஞ்சம் மண், தாவரங்கள் இருந்தால் அழகுபடுத்த உதவும் என்று கேட்டுள்ளார். அதைக் கொண்டு பால்கனியில் இருசுவர்களுக்கிடையில் உள்ள இடைவெளியில் அவர் தாவரங்களை வைத்துள்ளார். இதற்கு 2 மாதங்களுக்குப் பிறகு வீட்டை விஜய் காலி செய்துள்ளார்.

“திங்களன்று தொழிலாளர்களை வைத்து சுவற்றை இடிக்கச் சொன்னேன். அங்கிருந்து தாவரத்தையும், மண்ணையும் அகற்றச் சொன்னேன். இதை செய்த போது அங்கு எலும்புக்கூடு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உடனே தெரிவிக்க நான் போலீஸை வரவழைத்தேன்” என்றார் வீட்டு உரிமையாளர்.

இதனையடுத்து தாப்ரி போலீஸ் நிலைய ஆபீசர், குற்றப்புலனாய்வுத் துறை ஆகியோர் இடத்துக்கு விரைந்து புகைப்படங்கள், வீடியோ எடுத்தனர்.

தீன் தயாள் மருத்துவமனையில் பரிசோதனைக்காக எலும்புக்கூடு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது, டி.என்.ஏ சோதனை நடத்தி அது ஜெய்யின் எலும்புதானா என்று கண்டறியப்படும்.

ஜெய் பணியிலிருந்து திரும்பவில்லை என்று மாமா விஜய் அளித்த புகார் போலியானது என்று போலீஸார் இப்போதைக்கு முடிவெடுத்து கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Google+ Linkedin Youtube