பந்துவீச வரும்போதெல்லாம் ரத்த வாந்தி: ஆஸி.வீரர் ஜான் ஹேஸ்டிங்ஸ் அதிர்ச்சி; கிரிக்கெட் வாழ்வு கேள்விக்குறியான துயரம்

32 வயது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஜான் ஹேஸ்டிங்ஸ் கிரிக்கெட் வாழ்வு கேள்விக்குறியாகியுள்ளது. காரணம் அவருக்கு வந்துள்ள புரியாத புதிர் நுரையீரல் நோய் என்று ஆஸ்திரேலிய ஊடகமொன்றில் அவரே தெரிவித்துள்ளார்.

பிக்பாஷ் லீகில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்துள்ளார். மே மாதம் சிட்னி சிக்சர்ஸுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

இவர் ஒரு டெஸ்ட் 29 ஒருநாள் சர்வதேச போட்டிகள், 9 டி20 சர்வதேச போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்காக ஆடியுள்ளார். இவர் டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார்.

இந்நிலையில் அவர் கூறியதாவது: கடந்த 3 அல்லது 4 மாதங்களாகவே என் உடல் நிலையில் மாற்றம் தெரியத் தொடங்கியது. மிகவும் கடினமான காலக்கட்டமாக இருந்தது. ஒவ்வொரு முறை பந்து வீசத் தயாராகும் போதும் இருமல் வந்து ரத்தமாக வாந்தி எடுத்தேன்.

இதனால் பவுலிங் செய்ய முடியவில்லை. எனவே இது என்ன என்று கண்டுபிடித்து தீர்வு காணாதவரை எனக்கு நிம்மதியில்லை. இது எனக்கு பெரிய பிரச்சினையாக உள்ளது. ஆனால் இப்போது இதனை நான் கவலையாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் கடந்த 4 அல்லது 5 மாதங்களாக மிகவும் கடினமாக உள்ளது.

வாழ்நாள் முழுதும் கிரிக்கெட் ஆட வேண்டும் என்பதே குறிக்கோள். உலகம் முழுதும் கிரிக்கெட் ஆடிக்கொண்டேயிருக்க வேண்டும். இதனால்தான் நான் ஒருநாள் மற்றும் 4 நாள் கிரிக்கெட்டிலிருந்தே ஓய்வு பெற்றேன்.

அது கைநழுவி போகிறது என்றால் அதனை சீரணிக்க முடியவில்லை. இப்போதைக்கு ஏதும் அதிசயம் நடந்தால்தான் நான் மீண்டும் பந்து வீச முடியும்.

முன்பிருந்தே இந்தப் பிரச்சினை இருந்தது, ஆனால் எப்போதாவதுதான் தலைகாட்டும், ஆனால் சமீபமாக ஒவ்வொரு முறை பந்து வீசும் போதும் ரத்த இருமல் வருகிறது. குறிப்பாக போட்டியின் தீவிர கணங்களில் கொஞ்சம் வேகம் கூட்ட நான் பந்து வீச்சு மார்க்குக்குச் செல்லும்போது இருமல் வருகிறது, உடனே ரத்தம் வருகிறது. இது என்னை அச்சுறுத்துகிறது. நீண்ட நாள் சேதம் ஏற்படுத்தாது என்று நம்புகிறேன். இப்போது இது எனக்கு நல்லதாகப் படவில்லை.

Google+ Linkedin Youtube