முதல் பார்வை : ஆண் தேவதை

பெருநகர வாழ்க்கையில் கார்ப்பரேட் கலாச்சாரத்தில் சிக்கிய மனைவிக்கும், தேவைகளைச் சுருக்கிக்கொண்டு வாழ நினைக்கும் கணவனுக்கும் இடையே பிரச்சினை வெடித்தால் அதுவே 'ஆண் தேவதை'.

மெடிக்கல் ரெப்பாக பணிபுரியும் இளங்கோ (சமுத்திரக்கனி) மாதாமாதம் இலக்கைத் தொட வேண்டி வேலையைத் துரத்திக் கொண்டே ஓடுகிறார். அவரது மனைவி ஜெஸ்ஸிகா (ரம்யா பாண்டியன்) நல்ல சம்பளம், வசதியான வாழ்க்கை, பிள்ளைகளுக்கான நல்ல கல்வி ஆகியவற்றுக்காக ஐடி வேலையில் மிளிரத் துடிக்கிறார். இருவரும் பரபரப்பு மிகுந்த வேலையிலேயே கவனம் செலுத்துவதால் இவர்களின் இரட்டைக் குழந்தைகளானா ஆதிரா, அகர முதல்வனை யார் பார்த்துக்கொள்வது என்ற பிரச்சினை எழுகிறது. பிள்ளைகளின் நலனுக்காக வேலையை விட்டு வீட்டு வேலை செய்துகொண்டும், குழந்தைகளைப் பராமரித்துக் கொண்டும் சமுத்திரக்கனி மகிழ்ச்சியாக இருக்கிறார். ஆனால், பைக், கார் என்று கடன் வாங்கி வாகனங்கள் வாங்கியதும், சொந்த வீடு வாங்க வீட்டுக் கடன் வாங்கியதும் ரம்யா பாண்டியனை ஆபத்தின் எல்லையில் கொண்டுபோய் நிறுத்துகிறது. அப்படி என்ன ஆபத்து நிகழ்கிறது, சமுத்திரக்கனி ஏன் வீட்டை விட்டுச் செல்கிறார், அன்பான வாழ்க்கையில் ஏன் நிம்மதி பறிபோனது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

'பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினஸ்' படத்தின் தூண்டுதலிலும், பெருநகரத்தில் உள்ள கார்ப்பரேட் கலாச்சாரப் பாதிப்பையும் அடிப்பையாகக் கொண்டு 'ஆண் தேவதை' படத்தின் கதையைக் கட்டமைத்திருக்கிறார் இயக்குநர் தாமிரா. அவரின் அக்கறையை வரவேற்கலாம்.

சமுத்திரக்கனிக்கு அளவெடுத்து தைத்த சட்டை போன்ற பொருத்தமான கதாபாத்திரம். அதை அவர் நிறைவாகச் செய்திருக்கிறார். எதற்கெடுத்தாலும் கருத்து சொல்லிக்கொண்டே இருப்பது மட்டும் அவரது முந்தைய படங்களை நினைவூட்டுகின்றன. குழந்தைகள், பெரியவர்கள், மீட்டிங், மனைவி என்று எங்கேயும் எப்போதும் தத்துவார்த்தமாகப் பேசிக்கொண்டே இருக்கிறார். அந்தப் பாணி கொஞ்சல் அலுப்பூட்டுகிறது. மற்றபடி, பொறுப்பான தகப்பனைக் கண்முன் நிறுத்துகிறார். லாட்ஜின் பக்கத்து அறையில் முனகும் சப்தம் தன் குழந்தைக்குக் கேட்கக்கூடாது என்ற அவஸ்தையில் பெருங்குரலெடுத்துக் கதை சொல்லும் உத்தி ஓரளவு எடுபடுகிறது.

'ஜோக்கர்' படத்துக்குப் பிறகு ரம்யா பாண்டியனுக்கு நடிக்க ஒரு நல்வாய்ப்பு வழங்கப்பட்டும், அதை ஜஸ்ட் லைக் தட் காலி பண்ணியிருக்கிறார். அதுவும் தன் தோழியின் மரணத்தின் போது அவர் காட்டும் அதிர்ச்சி மிகச் சாதாரணமாக இருக்கிறது.

ஆதிராவாக வரும் பேபி மோனிகாவும், அகர முதல்வனாக வரும் மாஸ்டர் கவின் பூபதியும் ரசிக்க வைக்கிறார்கள். சுஜா வாருணி, ராதாரவி, காளி வெங்கட், ஹரீஷ் பெராடி, இளவரசு, அனுபமா, அறந்தாங்கி நிஷா என்று படத்தில் பலரும் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்குப் படத்தில் எந்த முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை.

விஜய் மில்டனின் ஒளிப்பதிவும், ஜிப்ரானின் இசையும் படத்தை ஓரளவு தாங்கிப் பிடிக்கிறது.

''நீ பார்க்குற வேலை உனக்குள்ள இருக்குற அழகான பொண்ணைக் கொன்னுடுச்சு, நீ மகிழ்ச்சியா இருக்கியா'', ''பொம்பளைங்க உடம்புக்குள்ள புதையலைத் தேடுறவங்களுக்கு புடவை துவைக்குறது தப்பாதான் தெரியும்'' போன்ற வசனங்கள் மூலம் இயக்குநர் தாமிரா கவனிக்க வைக்கிறார். நாம் வாழ்வதற்காக சம்பாதிக்கிறோமா இல்லை சம்பாதிப்பதற்காக வாழ்கிறோமா என்ற சமுத்திரக்கனியின் கேள்வி யோசிக்க வைக்கிறது.

குழந்தை வளர்ப்பு, பெற்றோரின் பொறுப்பு, தேவையில்லாத ஈகோ, நல்ல தொடுதல், கெட்ட தொடுதல், அலுவலக நண்பனால் நிகழும் பாலியல் சீண்டல், அளவுக்கு மீறிய தவணை முறைக் கடனால் வரும் தொல்லைகள் என்று படத்தில் நிறைய நல்ல கருத்துகளை தேவையான அளவுக்குச் சொல்லியிருக்கிறார். ஆனால், அவை எல்லாம் கருத்துகளாக மட்டுமே இருக்கிறதே தவிர, படத்துக்கான வலுவான காட்சிகளாக உருமாறவில்லை. அதனால் திரைக்கதையும் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் கடந்து போகிறது.

சமுத்திரக்கனி - ரம்யா பாண்டியன் ஆகிய இருவரின் அணுகுமுறைகளும் போலியானதாக உள்ளது. அதுவும் தொண்டூழியம் செய்ததாக கனி சொல்வதெல்லாம் கதாபாத்திரத்தின் சரிவு. திடீரென்று வளரும் சண்டை பிரியும் அளவுக்கு மாறுவது சரியாக காட்சிப்படுத்தப்படவில்லை. பாலியல் சீண்டலுக்கு உள்ளான பெண் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு வேலை பறிபோன பிறகும் அதை எதிர்க்காமல் கேள்வி எழுப்பாமல் இருப்பது ஏன், சொகுசு வாழ்க்கைக்காகவும், கெத்துக்காகவும் மட்டுமே ஆடம்பரமாக வாழும் தோழி கேட்டதற்காக கேள்வியே இல்லாமல் கடன் கொடுப்பது எப்படி சாத்தியம் போன்ற லாஜிக் கேள்விகள் எழுகின்றன. கணவன் வேலைக்குப் போக, மனைவி குடும்பத் தலைவியாகவே இருப்பதாகக் கூறுவது அபத்தம்.

மொத்தத்தில் நகர வாழ்க்கையின் சிக்கலைக் கூறும் நல்ல கருத்துள்ள படம் பார்த்தால் போதும் என்று நீங்கள் நினைத்தால் 'ஆண் தேவதை'க்கு நிச்சயம் ஆதரவு தரலாம்.

Google+ Linkedin Youtube