ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி, நிர்வாக இயக்குநராக சந்தீப் பக்‌ஷி: நியமனத்துக்கு ஒப்புதல் அளித்தது ஆர்பிஐ

ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓவாக சந்தீப் பக்‌ஷி நியமிக்கப்பட்டதற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓவாக இருந்த சாந்தா கோச்சார் ராஜினாமா செய்ததை அடுத்து, அப்பதவியில் சந்தீப் பக்‌ஷி நியமிக்கப்பட்டார்.


சாந்தா ராஜினாமா ஏன்?

ஐசிஐசிஐ வங்கியின் சிஇஓவான சாந்தா கோச்சார், தனது கணவர் தீபக் கோச்சார் மூலமாக வீடியோ கான் நிறுவனத்துக்கு வங்கியின் விதிமுறைகளை மீறி சுய ஆதாயத்துக்காகக் கடன் வழங்கியிருப்பதாகக் கடந்த சில மாதங்களுக்கு முன் குற்றம் சாட்டப்பட்டார். மேலும் வீடியோகானுக்கு 2012-ல் வழங்கப்பட்ட கடனில் 80 சதவீதம் திரும்பவரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் வீடியோ கான் வாங்கிய கடன் வாராக்கடனாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடன்களை விதிமுறைகளை மீறி வழங்கிய குற்றச்சாட்டில் சாந்தா கோச்சார் மீது விசாரணை தொடங்கியது. ஜூன் மாதம் முதல் சந்தா கொச்சர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.

அதைத்தொடர்ந்து சாந்தா கோச்சார் தனது பதவிகளை ராஜினாமா செய்தார். இதனால் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓவாக சந்தீப் பக்‌ஷி நியமிக்கப்பட்டார்.

சந்தீப் பக்‌ஷிக்கு ஐசிஐசிஐ வங்கியில் 32 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளது. அவர் கடந்த 1986-ம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியில் பணியைத் தொடங்கினார்.

சந்தீப் பக்‌ஷி, அக்டோபர் 3, 2023 வரை ஐந்து ஆண்டுகள் பொறுப்பில் நீடிப்பார் என்று ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவரது நியமனம், ஊதியம், மற்றும் பொறுப்புகள் உள்ளிட்டவற்றின் விதிமுறைகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறியுள்ளது.

இவரது நியமனத்துக்கு தற்போது ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளதாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.

Google+LinkedinYoutube