#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்

#MeToo புகாரில் சிக்கிய காமெடி நடிகர் டி.எம்.கார்த்திக் ட்விட்டரில் மன்னிப்பு கேட்டார்.

இந்தியாவில் #MeToo மூவ்மெண்ட் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி வருகிறது. அரசியல், சினிமா, ஊடகம் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் கவிஞர் வைரமுத்து, நடன இயக்குநர் கல்யாண், இயக்குநர் சுசி கணேசன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘என்றென்றும் புன்னகை’, ‘செக்கச்சிவந்த வானம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள காமெடி நடிகர் டி.எம்.கார்த்திக் மீதும் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அதை, பின்னணிப் பாடகி சின்மயி தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான டி.எம்.கார்த்திக், ட்விட்டரில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். “சமீப நாட்களாக #MeToo இயக்கத்தின் கீழ் நான் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. என்னுடனான சந்திப்பின்போது யாரேனும் அசவுகரியமாக உணர்ந்திருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கோரவே இந்தப் பதிவை இடுகிறேன்.

எனது தனிப்பட்ட வாழ்விலும், தொழில்ரீதியான தொடர்புகளிலும் நான் எப்போதுமே பெண்களிடம் மரியாதையாகவே நடந்து கொண்டிருக்கிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் எல்லோரும் மனம் ஒத்தே இருந்தனர் என நம்பினேன். அதுதான் தவறு. இப்போது நான் உணர்கிறேன். சில நேரங்களில் நான் அத்துமீறியிருக்கலாம். ஆனால், எந்த ஒரு பெண்ணையும் அசவுகரியமாக உணரவைக்க வேண்டும் என நான் திட்டமிட்டதில்லை.

நான் அணுகும் பெண்கள் அசவுகரியமாக உணர்ந்தால், அவர்களிடம் இருந்து விலகிவிடுவேன். என்னால் யாரேனும் வேதனைப்பட்டிருந்தால், அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். இதை நான் பொறுப்பைத் தட்டிக் கழிக்கவோ அல்லது விளைவுகளைத் தவிர்க்கவோ தெரிவிக்கவில்லை.

இந்த #MeToo இயக்கம், என்னை நானே சுயபரிசோதனை செய்துகொள்ள ஒரு உந்துதலாக இருக்கிறது. பல ஆண்டுகளாகப் பல பெண்களுடன் நான் வெற்றிகரமாகப் பணியாற்றியிருக்கிறேன். பெண்ணியத்துக்காகவும் தோள் கொடுத்திருக்கிறேன்.

என்னால் எப்போதும் யாரும் அசவுகரியமாக உணர்ந்ததில்லை. அப்படி எதிர்மறை விமர்சனங்களை நான் சந்தித்ததில்லை. ஆனால், சில பெண்கள் அசவுகரியத்தை வெளிக்காட்டாமல் என்னைச் சகித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை இப்போது உணர்கிறேன். அதை அன்றே புரிந்திருக்க வேண்டும்.

எனது தவறுகளுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். இல்லை வேறு ஏதாவது ஒரு தளத்தில் நான் மன்னிப்பு கோர வேண்டும் என்று விரும்பினாலும், அதற்கும் நான் தயாராக இருக்கிறேன். எதிர்காலத்தில் என்னைத் திருத்திக்கொள்ள நான் முற்படுகிறேன். #Metoo இயக்கத்துக்கு எனது முழு ஆதரவைத் தெரிவிப்பதோடு, இந்த உலகை பெண்களுக்குp பாதுகாப்பானதாக்கத் துணை நிற்பேன் என உறுதிமொழி அளிக்கிறேன்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் டி.எம்.கார்த்திக்.

Google+LinkedinYoutube