ஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு

இந்திய-அமெரிக்கர்களால் நடத்தப்படும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஐடி அமைப்பு ஒன்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்றச் சேவை (USCIS) மீது எச்1பி விசா காலக்குறைப்பு தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளது.

சிறப்பு நிபுணத்துவம் வாய்ந்த பணிகள், தொழில்நுட்ப வல்லுநர் தேவைப்படும் பணிகளுக்காக அமெரிக்க நிறுவனங்கள் இந்தியா, சீனாவிலிருந்து பணியாளர்களைத் தேர்வு செய்ய வழிவகுக்கும் எச்1பி விசா என்பது குடியேற்ற விசா இல்லை. இதன் மூலம்தான் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் அயல்நாட்டுப் பணியாளர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வேலை கொடுத்து வருகிறது.

இந்த விசாக்கள் பொதுவாக 3 முதல் 6 ஆண்டுகாலம் வரையில் செல்லுபடியுள்ளதாகும்.

இந்நிலையில் டெக்ஸாசில் உள்ள டலாஸைச் சேர்ந்த ஐடி சர்வ் அலையன்ஸ் என்ற அமைப்பு கடந்த வாரம் அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்றச் சேவை மீது தொடர்ந்த வழக்கில் 43 பக்க புகாரில் 3 ஆண்டுகளுக்கும் குறைவாக பணிக்காலம் உள்ள எச்1பி விசா விண்ணப்பங்களுக்கு வழங்கும் போக்கை கையாண்டு வருகிறது என்றும் “சில வேளைகளில் சில மாதங்கள், சிலநாட்களே செல்லுபடியாகும் எச்1பி விசா விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கிறது மேலும் அதற்கான அனுமதி நம் கைக்கு வருவதற்குள்ளாகவே அது காலாவதியாவதும் நடக்கிறது” என்று தங்கள் மனுவில் தெரிவித்துள்ளது.

யு.எஸ்.சி.ஐ.எஸ். ஏற்கெனவே இருக்கும் விதிமுறைகள், கட்டுப்பாடுகளுக்கு தவறான வியாக்கியானம் அளிக்க சட்ட ரீதியாக அதிகாரம் இல்லாதது. காலத்தைக் குறைக்கும் அதிகாரம் இதற்குக் கிடையாது. அமெரிக்க நாடாளுமன்றம் தொழிலாளர் துறைக்கு 3 ஆண்டுகள் காலக்கட்டத்துக்கு அனுமதி வழங்குமாறே அதிகாரத்தை இதனிடம் வழங்கியுள்ளது, எனவே யு.எஸ்.சி.ஐ.எஸ்-இன் சமீபத்திய போக்கு சட்டவிரோதமானது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இது ஒரு பெரிய சட்டப்போராட்டத்துக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது.

Google+ Linkedin Youtube