மீ டூ விவகாரம்: அர்ஜுன் மீது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார்

மீ டூ விவகாரத்தில் நடிகர் அர்ஜுன் மீது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா, பிரபல பாலிவுட் நடிகர் நானே படேகர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்ததைத் தொடர்ந்து திரைப்படத் துறையைச் சேர்ந்த நடிகை, பின்னணிப் பாடகி, இயக்குநர் எனப் பலரும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகளையும், வன்முறைகளையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக வழக்கு தொடுக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

சின்மயி வைரமுத்து மீதும், இயக்குநர் லீனா மணிமேகலை இயக்குநர் சுசி கணேசன் மீதும் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தனர். இந்நிலையில் 'நிபுணன்' படத்தில் நடித்த ஸ்ருதி ஹரிஹரன் நடிகர் அர்ஜுன் மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''அர்ஜுன் சார்ஜா நாயகனாக நடித்த இரு மொழிப் படத்தில் நானும் நடித்தேன். அர்ஜுனுடன் நடிப்பது குறித்து மகிழ்ச்சியாக இருந்த நான் அதற்குப் பிறகு அந்த மகிழ்ச்சியை உணரவில்லை. ஏனெனில் ஒரு காதல் காட்சியின்போது அர்ஜுன் என் அனுமதியில்லாமல் திடீரென்று கட்டிப்பிடித்தார். நான் அதை எதிர்பார்க்கவில்லை. என்னிடம் சொல்லாமல், என் அனுமதியும் பெறாமல் திடீரென்று என்னைக் கட்டி அணைத்தது எனக்குள் காயத்தை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு, இப்படி ஒரு காட்சி வைத்துக்கொள்ளலாமா என்று இயக்குநரிடம் அர்ஜுன் கேட்டார். சினிமாவாக இருந்தாலும் நெருக்கமான காட்சிகளில் நடிகையின் அனுமதி இல்லாமல் அப்படிச் செய்தது தவறு. அதற்குப் பிறகு எந்த நெருக்கமான காட்சிக்கும் ஒத்திகை என்ற பெயரில் நடக்கும் எந்தச் செயலுக்கும் நான் ஒத்துழைக்கவில்லை. அதை அனுமதிக்கவும் இல்லை. நான் படப்பிடிப்பு முடியும் வரை அர்ஜுனிடம் இருந்து விலகி நின்றேன். அதிகாரத்தைப் பயன்படுத்தி யாரும் யாருக்கும் பாலியல் தொந்தரவு, பாலியல் சீண்டல் தரக்கூடாது'' என்று ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Google+ Linkedin Youtube