'உங்களை ஆதரிக்கிறேன், ஆனால்...'- குஷ்பூ கேள்வி; 'குற்றவாளிகளைப் பாதுகாப்பதை நிறுத்துங்கள்'- சின்மயி விளாசல்

பெண்கள் பணியிடங்களிலும் பொது சமூகத்திலும் தாங்கள் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்களை, #மீடூ என்ற இயக்கத்தின் கீழ் பதிவு செய்துவருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் சின்மயி, வைரமுத்துவின் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

குற்றச்சாட்டுகளை வைரமுத்து மறுத்தாலும், சர்ச்சை ஓய்ந்தபாடில்லை.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த குஷ்பூ, ''சின்மயி ஏன் பாடகர் சங்கத்தில் புகார் அளிக்கவில்லை'' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த சின்மயி, ''நான் என்ன செய்திருக்க வேண்டும், எப்போது பேசியிருக்க வேண்டும் என்றுதான் அனைவரின் கேள்விகளும் இருக்கின்றன. அது அவர்களின் உரிமையும்கூட. ஆனால் ஆதாரபூர்வமாக மூன்று பெண்கள் ஊடகத்தின் முன்பு பேசி, அவர்களை அடையாளப்படுத்தி இருக்கிறோம். இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்?'' என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் ட்வீட் இட்ட குஷ்பூ,''உங்களை எப்போதும் நான் ஆதரிக்கிறேன். ஆனால் என்னுடைய நியாயமான கேள்விகள் அப்படியே இருக்கின்றன'' என்று பதிவிட்டார்.

இதற்கு பதில் அளித்துள்ள சின்மயி, ''டப்பிங் சங்கத்தின் 15-க்கும் மேற்பட்ட புகார்கள் நீதிமன்றத்தில் உள்ளன. ஒரு டப்பிங் கலைஞர் புகார் கொடுத்ததற்காக, சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். அந்தப் பெண்ணுக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பதில் அளிக்ககப்படாத பல்வேறு கேள்விகள் டப்பிங் சங்கத்தில் இருக்கின்றன.

எப்போது நான் பேசியிருக்க வேண்டும் என்பதை விடுங்கள். இப்போது நான் உரத்துப் பேசியிருக்கிறேன். ’எல்லோருக்கும் தெரிந்த’ வைரமுத்துவுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

பாலியல் குற்றவாளிகள் மீதான் நிலைப்பாடு என்ன? பணியிடங்களில் நடைபெறும் அச்சுறுத்தல்களுக்கு என்ன தீர்வு?

எங்களுக்கு எத்தனை எத்தனை அறிவுரைகள், எத்தனை கேள்விகள்?

அன்பார்ந்த சமூகமே, குற்றவாளிகளைப் பாதுகாப்பதை நிறுத்துங்கள்'' என்று தெரிவித்துள்ளார் சின்மயி.

Google+ Linkedin Youtube