கசப்பானதாக இருந்தாலும், உண்மையையும் நியாயத்தையும் புரிந்து கொண்டதற்கு நன்றி: ரஜினி

என்னையும் உங்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என ரஜினி தெரிவித்துள்ளார்.

ரஜினி மக்கள் மன்றத்திற்குள் சிலர் வேறு எண்ணங்களுடன் பயணிப்பதையும், ரஜினி மக்கள் மன்றம் குறித்த தவறான வதந்திகள் பரப்பப்படுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த 23-ம் தேதி அறிக்கை மூலம் விளக்கம் அளித்தார் ரஜினிகாந்த்.

அந்த அறிக்கை ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த அறிக்கைக்கு விளக்கம் அளிக்கும் வகையில் இன்று இன்னொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் ரஜினி.

அதில், “என்னை வாழவைத்த தெய்வங்களான எனது அன்பு ரசிகர்களுக்கு, நான் கடந்த 23-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், மக்கள் மன்றச் செயல்பாடுகள் குறித்து சில உண்மைகளைச் சொல்லியிருந்தேன். அது கசப்பானதாக இருந்தாலும், அதில் உள்ள உண்மையையும் நியாயத்தையும் புரிந்து கொண்டதற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களைப் போன்ற ரசிகர்களை நான் அடைந்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன். என்னையும் உங்களையும் யாராலும், எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நாம் எந்தப் பாதையில் போனாலும், அந்தப் பாதை நியாயமானதாக இருக்கட்டும். ஆண்டவன் நமக்குத் துணை இருப்பான்” எனத் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

இந்த அறிக்கை, ரஜினி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Google+ Linkedin Youtube